நாளை நடைபெறும் அதிமுக கூட்டம் செல்லாது: ஒ.பன்னீர் செல்வம் அறிக்கை

நாளை நடைபெற உள்ள அதிமுக தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.
நாளை நடைபெறும் அதிமுக கூட்டம் செல்லாது: ஒ.பன்னீர் செல்வம் அறிக்கை
Published on

சென்னை,

ஒற்றை தலைமை விவகாரத்தில் எழுந்துள்ள உட்கட்சி மோதலை தொடர்ந்து, மாவட்டங்களில் உள்ள அதிமுக கட்சி அலுவலகங்களில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் படம் அகற்றப்பட்டு வருகிறது. ஒற்றைத் தலைமை விவகாரத்தால் கடந்த 23ம் தேதி நடந்த அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பெரும் சலசலப்புடன் நடந்து முடிந்தது. கூட்டத்தில் பெரும்பாலானோர் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளராக இருந்ததால், ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்தனர். இதனால், கூட்டத்தின் பாதியிலே ஓ.பன்னீர்செல்வம் அவரது ஆதரவாளர்களுடன் எழுந்துச்சென்றார்.

மேலும், அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய அனைத்து தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டன. தொடர்ந்து, ஒற்றைத் தலைமையை தேர்வு செய்வதற்கான பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று அந்த கூட்டத்திலே அறிவிக்கப்பட்டது.

இந்த சூழலில் சென்னை ராயப்பேட்டையிலுள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் நாளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது. ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பெயரில்லாமல் தலைமைக்கழகம் எனக் குறிப்பிட்டு அந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தது.

இதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழம் வெளியிட்ட அந்த அறிக்கையில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமைக் கழக நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, 27.6.2022 திங்கட் கிழமை காலை 10 மணிக்கு, தலைமைக் கழகம் - எம்.ஜி.ஆர். மாளிகை கூட்ட அரங்கில், தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நடைபெற உள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று ஒ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி 27.06.2022 அன்று நடைபெறவுள்ள தலைமைக் கழக நிர்வாகிகள் கூட்டம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல" என்று அதில் ஒ.பன்னீர்செல்வம் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com