அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கொலை வழக்கு; பவாரியா கொள்ளையர்களுக்கு இன்று தண்டனை அறிவிப்பு

பவாரியா கும்பலைச் சேர்ந்த ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது.
சென்னை,
கடந்த 1995 முதல் 2005 வரை வடமாநிலங்களைச் சேர்ந்த ‘பவாரியா’ கொள்ளையர்கள், தமிழகத்தில் பல கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி பீதியை ஏற்படுத்தினர். அதில் முக்கியமாக கடந்த 2005-ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்ட கும்மிடிப்பூண்டி தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ சுதர்சனத்தின் வீட்டிற்குள் புகுந்த பவாரியா கொள்ளையர்கள், அவரை சுட்டுக்கொன்றுவிட்டு வீட்டில் இருந்த நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.
தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொள்ளையர்களை சுட்டுப்பிடிக்க அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அதிரடியாக உத்தரவிட்டார். இதையடுத்து ஐ.ஜி. ஜாங்கிட் தலைமையில் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்திய போலீசார், அடுத்த ஒரு மாதத்திற்குள் ராஜஸ்தான், அரியானாவை சேர்ந்த 9 பவாரியா கொள்ளையர்களை கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்தனர். கைதான 9 பேரில் 3 பேர் ஜாமீனில் வெளியாகி தலைமறைவான நிலையில், 2 பேர் சிறையிலேயே உயிரிழந்தனர்.
தற்போது சிறையில் உள்ள ஜெகதீஷ், ராகேஷ், அசோக் மற்றும் ஜாமீன் பெற்ற ஜெயில்தார் சிங் ஆகிய 4 பேர் வழக்கை சந்தித்து வருகின்றனர். இவர்கள் மீதான வழக்கில் சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு சென்னை கூடுதல் நீதிமன்ற அமர்வு கடந்த 21-ந்தேதி தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, பவாரியா கும்பலைச் சேர்ந்த ஜெகதீஷ், ராகேஷ் மற்றும் அசோக் ஆகிய மூவரும் குற்றவாளிகள் என கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதனை தொடர்ந்து, குற்றவாளிகளின் தண்டனை விவரங்களை 24-ந்தேதி(இன்று) கோர்ட்டு அறிவிக்க உள்ளது.






