சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் உரிமைக்குழு விசாரணைக்கு அனுப்பப்படுகிறது

சட்டசபையில் வரம்பு மீறி செயல்பட்டதாக தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மீது சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. வெற்றிவேல் புகார் அளித்துள்ளார்.
சபாநாயகரிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. புகார் உரிமைக்குழு விசாரணைக்கு அனுப்பப்படுகிறது
Published on

சென்னை,

வரம்பு மீறினர்

பெரம்பூர் எம்.எல்.ஏ. வெற்றிவேல் (அ.தி.மு.க.) நேற்று தலைமைச் செயலகத்திற்கு வந்து சபாநாயகர் ப.தனபாலை சந்தித்தார். பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த 18-ந் தேதி சட்டசபையில் அரசுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடந்தப்பட்டது. அன்று தி.மு.க.வினரால் வரம்பு மீறிய சம்பவங்கள் நடந்தன. குறிப்பிட்ட சில எம்.எல்.ஏ.க்கள் மேஜையை உடைத்தனர். சேர்களை வீசினார்கள்.

உரிமைக்குழு

சபாநாயகர் ஏற்கனவே ஒரு சாலை விபத்தில் இருந்து தப்பித்தவர். அவரது உடல் மீது கைவைத்து பிடித்துத்தள்ளினர். இது எனக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியது. எனவே, 20-ந் தேதி சபாநாயகரிடம் இதுபற்றி சில எம்.எல்.ஏ.க்களின் பெயரைக் குறிப்பிட்டு புகார் எழுதிக்கொடுத்துள்ளேன். அதை இன்று நினைவுபடுத்தி இருக்கிறேன்.

அந்த கடிதத்தை உரிமை குழுவுக்கு அனுப்புவதாக சபாநாயகர் தெரிவித்தார். இதற்கான பதிலை பின்னர் தெரிவிப்பதாக தெரிவித்தார். அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் யாரும் பிரச்சினை செய்யவில்லை.

மாற்றிய நிலைப்பாடு

காலம்தாழ்த்தினால் குதிரை பேரத்துக்கு வழிவகுக்கும் என்று கூறிய தி.மு.க., பின்னர் தங்களின் நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு ஒரு வாரம் கழித்தும் நம்பிக்கைத் தீர்மானத்தை கொண்டுவரும்படி கேட்கின்றனர்.

உணர்ச்சிவசப்பட்டு பேசுவது வேறு. இடத்தைவிட்டு எழுந்து சென்று செயல்படுவது என்பது வேறு. எதிர்க்கட்சித் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் அதைக் கண்டிக்கவில்லை. இதில் நல்ல முடிவு எடுக்கும்படி கேட்டிருக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com