

சென்னை
தமிழக சட்டசபை கூட்டம், வரும், 8 ஆம் தேதி தொடங்குகிறது. அன்று, கவர்னர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில்,சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும்,பங்கேற்க உள்ளார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், 'டிபாசிட்'டை பறிகொடுத்த தி.மு.க.,வினர், சட்டசபையில், பல்வேறு பிரச்னைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளனர். மேலும், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார்.
இவற்றை முறியடிக்கவும், சட்டசபை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அதிமுக எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், இன்று காலை, 10:00 மணிக்கு, சென்னையில், ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் தொடங்கியது. இதில் 104 எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர் சொந்த காரணங்களின் காரணமாக 7 எம்.எல்.ஏக்கள் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வமும் கலந்து கொண்டு உரையாற்றி வருகின்றனர்.
அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, கடம்பூர் ராஜூ, பாஸ்கர் ஆகிய 3 பேரும் கலந்து கொள்ளவில்லை.
செல்லூர் ராஜூ சபரி மலைக்கு மாலை அணிந்திருப்பதால் கூட்டத்திற்கு வரவில்லை என்றும், கடம்பூர் ராஜூ, பாஸ்கர் ஆகியோர் வேலுநாச்சியார் விழா ஏற்பாடுகளுக்காக வரவில்லை என்றும் கூறப்பட்டது.
எம்.எல்.ஏ.க்கள் ஆறு குட்டி, சிவசுப்பிரமணியம், பிரபு, பவுன்ராஜ் ஆகியோரும் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இதற்கான காரணம் அறிவிக்கப்படவில்லை.
தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்களான ரத்தின சபாபதி, கலைச்செல்வன் ஆகிய இருவரும் இன்றைய கூட்டத்தை புறக்கணித்தனர்.
இந்நிலையில், உளவுத்துறை முதல்வரிடம் அளித்த அறிக்கை ஒன்றில் மொத்தம் 15 அமைச்சர்களும், 22 எம்.எல்.ஏக்களும் தினகரனுடன் தொடர்பில் இருப்பதாகவும், சூழ்நிலை வரும் போது அவர்கள் அணிமாற வாய்ப்பிருப்பதாகவும் கூறப்பட்டது. இதனால் அதிர்ச்சியைடந்துள்ள எடப்பாடி-ஓபிஎஸ் தரப்பு இன்று நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், இதுபற்றி விவாதித்து தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் மற்றும் அமைச்சர்களை எச்சரிக்கை செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதோடு, வருகிற 8ம் தேதி சட்டமன்றம் கூடும் போது, திமுக எம்.எல்.ஏக்கள் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோரை எப்படி சமாளிப்பது, எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து ஆலோசிக்கப்படும் எனத் தெரிகிறது.
#ADMK | #OPS-EPS | #TTVDhinakaran,