வேலூர் பல்நோக்கு மருத்துவமனையை உடனே திறக்க கோரி 8-ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி

அரசு மருத்துவமனையை, விளையாட்டு பிள்ளைகளின் மைதானம்போல் நினைத்து திமுக அரசு நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கது என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
அரசு செயல்படுத்தும் ஒவ்வொரு திட்டமும் மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில்தான் உருவாக்கப்படுகிறது. குறிப்பாக, மருத்துவமனைகள், கல்விக்கூடங்கள் போன்றவை அமைக்கப்படும்போது, அவை முழுமையான பயன்பாட்டிற்கு உகந்த வகையில் கட்டப்பட்டுள்ளதா? தேவையான உள்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள் உள்ளதா? என்பதையெல்லாம் ஆராய்ந்துதான் திறப்புவிழா நடத்தப்பட வேண்டும்.
`அதிசயம், ஆனால் உண்மை' என்பதுபோல், ஒரு வாரத்திற்கு முன்பு (25.6.2025) மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படாத நிலையில்; உள்கட்டமைப்பு முழுமையாக ஏற்படுத்தாத நிலையில், எந்தவித வசதியும் இல்லாமல் வெற்று விளம்பரத்திற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வேலூரில் 125 ஆண்டுகளுக்கும் மேலான வரலாறு கொண்ட பென்லாண்ட் மருத்துவமனைக் கட்டட வளாகத்தில் புதிதாக 7 மாடிக் கட்டடத்தைக் கட்டி, அதற்கு சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை என்று பெயரிட்டு அரைகுறையாகக் கட்டப்பட்ட கட்டடத்தைத் திறந்தார். 'விட்டதடி ஆசை, விளாம்பழம் ஓட்டோடு' என்பதுபோல், இம்மருத்துவமனை திறந்த வேகத்திலேயே மூடு விழாவும் கண்டிருக்கிறது.
இம்மருத்துவமனை அவசர கதியில் திறக்கப்பட உள்ளதாக, ஏற்கெனவே நான் அறிக்கை வெளியிட்டபோது, மருத்துவத் துறையைப் பற்றி எதுவுமே தெரியாத அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழ வழ, கொழ கொழ என்று பேட்டி அளித்து பூசி மெழுகினார். முதல்-அமைச்சர் திறந்து வைத்த மருத்துவமனை இப்போது மூடப்பட்டது ஏன்?
ஏழை, எளிய, நடுத்தர மக்களின் நலனுக்காக செயல்பட வேண்டிய அரசு மருத்துவமனையை, விளையாட்டுப் பிள்ளைகளின் மைதானம் போல் நினைத்து இந்த விடியா திமுக ஸ்டாலின் மாடல் அரசு நடந்துகொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஸ்டாலின் மாடல் ஆட்சியின் அலட்சிய போக்கைக் கண்டித்தும்; பலகோடி செலவில் கட்டப்பட்ட சிறப்பு பல்நோக்கு மருத்துவமனை அனைத்து வசதிகளோடு மீண்டும் முறையாக திறந்து செயல்படுத்தவும் வலியுறுத்தி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேலூர் மாநகர் மாவட்டக் கழகத்தின் சார்பில், 8.7.2025, செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில், வேலூர் அண்ணா கலையரங்கம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் கழக அமைப்புச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முக்கூர் சுப்பிரமணியன் தலைமையிலும்; வேலூர் மாநகர் மாவட்டக் கழகச் செயலாளர் அப்பு முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வேலூர் மாநகர் மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், மாநகராட்சி மாமன்ற, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும், பொதுமக்களும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






