அ.தி.மு.க. பொதுக்குழு இன்று கூடுகிறது: கொரோனா பரிசோதனை முடிவுடன் வரும் உறுப்பினர்களுக்கு மட்டுமே அனுமதி

அனல் பறக்கும் அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னையில் கூடுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

அனல் பறக்கும் அரசியல் சூழ்நிலையில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) சென்னையில் கூடுகிறது. கொரோனா பரிசோதனை முடிவுடன் வரும் உறுப்பினர்களுக்கே அனுமதி அளிக்கப்பட இருக்கிறது.

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் அ.தி.மு.க. அரசின் பதவிக்காலம் வரும் மே மாதம் 24-ந்தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னதாக, புதிய அரசு தேர்ந்தெடுக்கப்பட்டாக வேண்டும். எனவே, தேர்தலை நடத்துவதற்கான வேலையில் இந்திய தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

இதற்கிடையே, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தமிழக அரசியல் கட்சிகள் இப்போதே தயாராகி வருகின்றன. அ.தி.மு.க.வுக்கு தலைமை வகிக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட வாரியாக தேர்தல் பிரசாரத்தை தொடங்கிவிட்டார். எதிர்க்கட்சியான தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் மக்கள் கிராம சபை கூட்டத்தை தமிழகம் முழுவதும் நடத்தி, மக்களிடம் குறைகளை கேட்டு வருகிறார்.

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனும் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இத்தகைய அனல் பறக்கும் அரசியல் சூழ்நிலையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுவை கூட்ட, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கடந்த மாதம் 20-ந்தேதி ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த ஆலோசனையில் எடுக்கப்பட்ட முடிவின்படி, அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று (சனிக்கிழமை) காலை 8.50 மணிக்கு சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக 2,200 பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களுக்கும், 1,500 சிறப்பு அழைப்பாளர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும், கூட்டத்தில் பங்கேற்க வரும் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்துகொண்டு, கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு அறிவித்திருக்கும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றியும், சமூக இடைவெளியை கடைப்பிடித்தும், முககவசம் அணிந்தும், தங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பிதழோடு கலந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடும் கெடுபிடிகளுக்கு மத்தியிலேயே அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று கூடுகிறது. கூட்டத்திற்கு கட்சியின் அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமை தாங்குகிறார். கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றுகிறார்கள். துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

கூட்டத்தில், புதிதாக அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவுக்கு ஒப்புதல் அளிக்கப்படுகிறது. மேலும், முதல்-அமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டதற்கு வரவேற்பு தெரிவிப்பதுடன், கூட்டணி குறித்து முடிவு எடுக்க ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அதிகாரம் வழங்கப்படும் என்றும் தெரிகிறது. கட்சியின் ஆண்டு அறிக்கையும் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது.

சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக இந்த கூட்டம் நடைபெறுவதால், கூட்டணி உள்பட பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தெரிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com