எடப்பாடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியை தாக்க முயன்ற அதிமுகவினர் - தீயாய் பரவும் வீடியோ

எடப்பாடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியை அதிமுகவினர் தாக்க முயன்றனர்.
எடப்பாடியில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தியை தாக்க முயன்ற அதிமுகவினர் - தீயாய் பரவும் வீடியோ
Published on

எடப்பாடி,

சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள சேலம் பிரதான சாலையில் உள்ள ஒரு தனியார் அரங்கில், ஓ.பி.எஸ் ஆதரவாளர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி பிரபாகரன், பெங்களூரு புகழேந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டு, எடப்பாடி பழனிசாமியை விமர்சித்து பேசினர்.

அப்போது திடீரென அ.தி.மு.க.வினர் ஆலோசனை கூட்டத்தில் புகுந்து அங்கிருந்த அ.தி.மு.க கொடி மற்றும் சின்னங்களை அகற்ற வேண்டும் என கூச்சலிட்டு அங்கிருந்த பேனர்கள் மற்றும் கொடிகளை அகற்ற முயற்சித்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த நிலையில் ஆலோசனை கூட்டம் முடிந்து நிர்வாகிகள் அங்கிருந்து காரில் புறப்பட்டனர்.

அப்போது எடப்பாடி நகர செயலாளர் முருகன் தலைமையில் அ.தி.மு.க.வினர் திரண்டு, புகழேந்தியின் காரை வேகமாக தட்டி, தகாத வார்த்தைகளால் பேசி அவரை தாக்க முயன்றனர். சுதாரித்துக் கொண்ட புகழேந்தியின் கார் டிரைவர், காரை விரைவாக ஓட்டி அங்கிருந்து தப்பிச் சென்றார். இதனால் புகழேந்தி நல்விதமாக எந்தவித காயங்களுமின்றி உயிர் தப்பினார்.

தற்போது இது குறித்த வீடியோ காட்சிகள் வாட்ஸ்-அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com