அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம்; பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்

அணிகள் இணைந்ததை வரவேற்கும் வகையில் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர்.
அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம்; பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்
Published on

சென்னை,

ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவு காரணமாக முதல்அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி, முன்னாள் முதல்அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அணி என அ.தி.மு.க. 2 ஆக உடைந்தது. அ.தி.மு.க. தொண்டர்களும் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு இரு பிரிவாக இருந்தனர்.

அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு தலைவர்கள் வருகை குறைவாகவே இருந்ததால் தொண்டர்களின் வருகையும் குறைந்து வெறிச்சோடியே காணப்பட்டது. 2 அணிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட வேண்டும் என்பதையே பெரும்பாலான தொண்டர்கள் விரும்பினர்.

அணிகளை இணைக்கும் முயற்சி நேற்று உறுதியானதை தொடர்ந்து காலையிலேயே அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தொண்டர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மட்டுமல்லாது தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான தொண்டர்கள் வந்திருந்தனர். கட்சி அலுவலகம் மட்டுமின்றி அவ்வை சண்முகம் சாலை முழுவதும் தொண்டர்கள் திரண்டு நின்றனர்.

அணிகள் இணைப்பு இறுதியான நிலையில், பிற்பகல் 2.15 மணி அளவில் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்கு வந்தார். இதையடுத்து 2.40 மணி அளவில் ஓ.பன்னீர்செல்வமும் வந்தார். அணிகள் இணைப்பு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதும், தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இனிப்புகள் வழங்கியும், ஒருவருக்கொருவர் ஆரத்தழுவியும் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

மகளிரணியினர் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகமாக இணைப்பை வரவேற்றனர். ஒருவருக்கொருவர் கைகோர்த்தும், இரட்டை விரலை உயர்த்தி காண்பித்தும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர். அணிகள் இணைப்பால் கட்சி அலுவலகம் மீண்டும் விழாக்கோலம் பூண்டது.

அணிகள் இணைப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்காகத்தான் நாங்கள் ஏங்கிக்கிடந்தோம். தற்போது எங்களுடைய பலம் அதிகரித்துள்ளதால் வருகிற தேர்தல்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தொண்டர்கள் கருத்து தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com