அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது - எல்.முருகன் பேட்டி

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது என்று பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.
அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது - எல்.முருகன் பேட்டி
Published on

தூத்துக்குடி

இது குறித்து தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜக தலைவர் எல்.முருகன் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

''நாளை மறுநாள் (மார்ச் 7) நாகர்கோவிலில் நடைபெறும் பிரம்மாண்ட தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொள்கிறார். அதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக நாகர்கோவில் செல்கிறேன்.

தமிழகம் முழுவதும் பாஜக தேர்தல் பணிகளைத் தொடங்கியுள்ளது. அதிமுகவுடனான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. நல்ல எண்ணிக்கையில் தொகுதிகளைக் கேட்டுள்ளோம். தமிழக சட்டப்பேரவையில் பாஜக உறுப்பினர்கள் நிச்சயம் இரட்டை இலக்க எண்ணிக்கையில் இருப்பார்கள்.

அரசியலை விட்டு விலகுவதாகக் கூறியுள்ள சசிகலா, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது எனத் தெரிவித்துள்ளதை வரவேற்கிறோம். திமுகவை ஆட்சிக்கு வரவிடக்கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம். தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மக்களுடைய எண்ணமாக உள்ளது. எனவே நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் திமுகவுக்குத் தக்க பாடம் புகட்ட மக்கள் தயாராக உள்ளனர்.

ராகுல் காந்தி பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று மத்திய அரசைப் பற்றி அவதூறாகப் பேசியுள்ளார். இதன் மூலம் தேர்தல் விதிமுறைகளை அவர் மீறியுள்ளார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு எல்.முருகன் தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com