"2026-ம் ஆண்டில் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும்" - மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி

2026-ம் ஆண்டில் மதுரை எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும் என மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
"2026-ம் ஆண்டில் எய்ம்ஸ் கட்டி முடிக்கப்படும்" - மதுரை ஐகோர்ட்டில் மத்திய அரசு உறுதி
Published on

மதுரை,

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக கடந்த 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். மதுரைக்குப் பின்பு அறிவிக்கப்பட்ட எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானங்கள் முடிந்துவிட்டன. ஆனால் மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கவில்லை. எனவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை நீதிமன்றம் வகுக்கும் காலத்திற்குள் விரைந்து கட்டி முடிக்க வேண்டும். கட்டுமான பணியில் உண்மையை மறைத்து பொய் அறிக்கையை வெளியிடும் அரசு அதிகாரிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கு நாடாளுமன்றத்தில் சிறப்பு தீர்மானம் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், விஜயகுமார் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசுத்தரப்பில் ஆஜரான வக்கீல், "மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகளுக்கான டெண்டர் ஒதுக்கீடு பணி நிறைவடைந்துவிட்டது. 2026-ல் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். மேலும் முழு விவரங்கள் அடுத்த வாரம் கோர்ட்டில் சமர்பிக்கப்படும்" என்று வாதிட்டார். மேலும் மனுதாரர் சம்பந்தமில்லாத அதிகாரிகளை மனுவில் சேர்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், "எதற்காக பிரதமர் மற்றும் முதல்- அமைச்சர் ஆகியோரின் முதன்மை செயலாளர்களை எதிர்மனுதாரர்களாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்?" என கேள்வி எழுப்பினர்.

பின்னர், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் குறித்து மத்திய நிதித்துறை செயலாளர், மத்திய சுகாதாரத்துறை செயலாளர், இந்திய மருத்துவ கழக இயக்குனர், மாநில சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com