கிணறு தூர்வாரும்போது கிடைத்த ஐம்பொன் கருடாழ்வார் சிலை

மூலைக்கரைப்பட்டி அருகே அரியகுளம் பஞ்சாயத்து அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகே ஊர் பொதுக்கிணற்றை தூர்வாரும் பணி நடந்தது.
நெல்லை மாவட்டம், மூலைக்கரைப்பட்டி அருகே அரியகுளம் பஞ்சாயத்து அம்பலம் கிராமத்தில் பிள்ளையார் கோவில் அருகே ஊர் பொதுக்கிணறு உள்ளது. சுமார் 50 அடி ஆழமுள்ள இந்த கிணற்றில் தற்போது குறைந்த அளவே தண்ணீர் உள்ளது. இந்த கிணற்றை யூனியன் பொதுநிதி மூலம் தூர்வாரும் பணி தொடங்கியது.
இதற்காக கிணற்றில் உள்ள தண்ணீரை மோட்டார் மூலம் உறிஞ்சி வெளியேற்றினர். தொடர்ந்து கிணற்றின் அடியில் உள்ள சகதியை அப்புறப்படுத்தினர். அப்போது கிணற்றின் அடியில் சுமார் 1½ அடி உயரம் கொண்ட ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலை கண்டெடுக்கப்பட்டது. மிகவும் பழமை வாய்ந்த இந்த சிலையின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து வருவாய்த்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, நாங்குநேரி தாசில்தார் பாலகிருஷ்ணன், யூனியன் ஆணையாளர் யமுனா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஐம்பொன் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து சிலையை தாலுகா அலுவலகத்துக்கு எடுத்து சென்றனர்.
பழங்கால ஐம்பொன்னாலான கருடாழ்வார் சிலை எப்படி அந்த கிணற்றுக்குள் வந்தது என்பது குறித்து பல்வேறு கோணங்களில் மூலைக்கரைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கும், தொல்லியல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.