பட்டாசு வெடிப்பு; புகை மூட்டமாக மாறிய சென்னை- காற்று மாசு அதிகரிப்பு

சென்னையில் நேற்று முன் தினம் காற்றின் தரக்குறியீடு 83 ஆகவும், நேற்று 115 ஆகவும் இருந்த நிலையில், இன்று 178 ஆக உயர்ந்துள்ளது.
பட்டாசு வெடிப்பு; புகை மூட்டமாக மாறிய சென்னை- காற்று மாசு அதிகரிப்பு
Published on

சென்னை,

தீபாவளி பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். நேற்று இரவு முதலே  பட்டாசுகளை வெடித்து மக்கள்   கொண்டாடி வருவதை காண முடிகிறது. நேற்று, வெறும் டிரெயிலர்தான் இன்றுதான் மெயின் பிக்சர் என்று சொல்லும் அளவுக்கு காலை முதலே பட்டாசுகளை மக்கள் வெடித்து வருகிறார்கள். சென்னை, நாகை, கோவை, தேனி, மதுரை, நெல்லை, குமரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பட்டாசுகளை வெடித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆனால் தீபாவளி நாளில் பட்டாசு வெடிப்பதற்கு சுப்ரீம் கோர்ட், 2 மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கி உள்ளது. அந்தந்த மாநில அரசுகள் எந்த 2 மணி நேரத்தில் பட்டாசு வெடிக்கலாம் என்று நிர்ணயித்துக்கொள்ளவும் அனுமதி அளித்தது. இதனால் காலை 6 மணி முதல் 7 மணி வரை பட்டாசுகளை வெடிக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தது. மேலும் வானவேடிக்கைகள், இரவில் ஒளிரும் பட்டாசுகளுக்காக மாலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை பட்டாசுகளை வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

எனினும், அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டியும் பட்டாசுகளை சிறுவர்கள், இளைஞர்கள் வெடித்து வருகின்றனர். அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடிப்பவர்களை கண்காணிக்க சென்னை காவல்துறை தனிப்படை அமைத்துள்ளது. அதன்படி நேற்றிரவு முதல் அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி பட்டாசு வெடித்ததாக இதுவரை 118 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இன்று காலை முதல் தொடர்ந்து பட்டாசுகளை வெடித்து வருவதால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னை ஆலந்தூரில் 188, வேளச்சேரியில் 179, அரும்பாக்கத்தில் 172 என காற்று மாசு பதிவாகியுள்ளது. சென்னையில் அனைத்து இடங்களிலும் 170 குறியீட்டுக்கும் அதிகமாக காற்று மாசு பதிவாகியுள்ளது. இந்த தகவலை மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் இன்று மாலை 4 மணி நிலவரப்படி காற்று மாசு 178 குறியீடாக இருந்ததாக கூறப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று முன் தினம் காற்றின் தரக்குறியீடு 83 ஆகவும், நேற்று 115 ஆகவும் இருந்த நிலையில், இன்று 178 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com