சென்னை விமான நிலையத்தில் விமான சேவை 5 மணிநேரம் நிறுத்தம்

பலத்த காற்று, மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் வருகை விமான சேவை 5 மணிநேரம் நிறுத்தப்பட்டது.
சென்னை விமான நிலையத்தில் விமான சேவை 5 மணிநேரம் நிறுத்தம்
Published on

ஆலந்தூர்,

பலத்த காற்று, மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் வருகை விமான சேவை 5 மணிநேரம் நிறுத்தப்பட்டது. மேலும் 51 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், 14 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று காலை கனமழையுடன் பலத்த காற்றும் வீசியதால் சென்னை விமான நிலையத்துக்கு துபாய், டெல்லி, கொச்சி, மும்பை, மதுரை, பெங்களூரு, திருச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களில் இருந்து வந்த 11 விமானங்கள் தரைஇறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.

அதேபோல் டெல்லி, ஐதராபாத், மதுரை ஆகிய நகரங்களில் இருந்து வந்த 3 விமானங்கள் தரை இறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு திருப்பி அனுப்பப்பட்டது.

பலத்த காற்று காரணமாக விமானங்கள் புறப்பட்டு செல்வதிலும் கால தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து சென்னை விமான நிலைய ஆணையக அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

அதன்படி சென்னை விமான நிலையத்துக்கு நேற்று பகல் 1.15 மணியில் இருந்து மாலை 6 மணி வரை வருகை விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவித்தது. மேலும் புறப்பாடு விமான சேவை வழக்கம்போல் செயல்படும் என விமான நிலைய ஆணையகம் அறிவித்து இருந்தது.

சென்னையில் இருந்து விமானங்கள் புறப்பட்டு செல்லும் என அறிவித்து இருந்தாலும் பயணிகள் விமான நிலையத்துக்கு வருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளதாலும், காற்று பலமாக வீசியதாலும் 30 நிமிடங்களில் இருந்து 4 மணிநேரம் வரை தாமதம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 5 மணிநேரத்துக்கு பிறகு மாலை 6 மணிக்கு பிறகு வருகை விமான சேவை சீரானது.

ஆனாலும் காற்று, மழை காரணமாக சென்னையில் இருந்து டெல்லி, கொச்சி, தூத்துக்குடி, மதுரை, அந்தமான், விஜயவாடா, கோவை, ஐதராபாத் உள்பட பல நகரங்களுக்கு செல்ல வேண்டிய 28 விமானங்களும், பெங்களூரு, கொச்சி, மதுரை, அந்தமான், மும்பை, டெல்லி உள்பட நகரங்களில் இருந்து சென்னை வர வேண்டிய 23 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

புறப்பாடு மற்றும் வருகை விமான சேவைகளின் நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளதாகவும், அது தொடர்பாக பயணிகளுக்கு உரிய தகவலை தெரிவிக்க விமான நிறுவனங்களுக்கு விமான நிலைய ஆணையகம் அறிவுறுத்தி இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com