ஏழை மாணவர்களுக்கு விமானப் பயணம்... முன்னாள் மாணவரின் நெகிழ்ச்சி செயல்!

இந்த கல்வி பயணம் தொடர்ந்து 3-வது ஆண்டாக நடத்தப்பட்டது.
ஏழை மாணவர்களுக்கு விமானப் பயணம்... முன்னாள் மாணவரின் நெகிழ்ச்சி செயல்!
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு வீரபாண்டிய கட்டபொம்மன் அரசு மேல்நிலைப்பள்ளியில் 1996-ம் ஆண்டு படித்தவர் அசோக் பிரபாகரன். தற்போது காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் துறையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். தான் படித்த பள்ளி மாணவர்கள் கல்வி, ஒழுக்கத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்கத்தில் தன்னுடன் படித்த நண்பர்கள் உச்சி மாகாளி, திருப்பதி, ராஜதுரை, முத்துக்கனி, ஜலாலுதீன், கணேசன், ராமசுப்பிரமணியன், ஆகியோரோடு சேர்ந்து, பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் துணையோடு கல்வி, பண்பு, ஒழுக்கம் ஆகியவற்றில் சிறந்து விளங்கிய ஏழ்மை நிலையில் உள்ள 4 மாணவர்கள், 6 மாணவிகள் என 10 பேரை தேர்வு செய்தார்.

கல்வி பயணம்

கல்வித்துறை அதிகாரிகளின் அனுமதியுடன், பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் 3 ஆசிரியர்களுடன் 10 மாணவ-மாணவிகளை தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு விமானத்தில் சொந்த செலவில் அழைத்து வந்தனர். இந்த கல்வி பயணம் தொடர்ந்து 3-வது ஆண்டாக நடத்தப்பட்டது.

சென்னையில் 2 நாட்கள் தங்கிய மாணவ-மாணவிகளை அசோக் பிரபாகரன் நேரில் அழைத்து சென்று அண்ணா பல்கலைக்கழகம், ஐ.ஐ.டி., அடையாறு புற்றுநோய் ஆஸ்பத்திரி, அண்ணா நூற்றாண்டு நூலகம், தலைமைச்செயலகம், பிர்லா கோளரங்கம், வண்டலூர் உயிரியல் பூங்கா உள்ளிட்ட இடங்களை பார்வையிட செய்தார். ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடியை சந்தித்து மாணவ - மாணவிகள் வாழ்த்து பெற்றனர்.

பயணம் முடிந்ததும் மாணவர்கள் ஆசிரியர்களுடன் வந்தே பாரத் ரெயிலில் பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மாணவர்களை ஊக்கப்படுத்தும் இந்த முயற்சிக்கு பள்ளி ஆசிரியர்கள், முன்னாள் மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com