புதிய வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தி மீண்டும் கைது


புதிய வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தி மீண்டும் கைது
x
தினத்தந்தி 17 Sept 2025 1:22 AM IST (Updated: 17 Sept 2025 1:39 AM IST)
t-max-icont-min-icon

கொலை முயற்சி வழக்கில் ஏர்போர்ட் மூர்த்தியை கைதுசெய்த போலீசார், புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை,

புரட்சி தமிழகம் கட்சி தலைவர் ஏர்போர்ட் மூர்த்தி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 4 பேர் கடந்த 6-ந்தேதி தாக்குதல் நடத்தினார்கள். சென்னை போலீஸ் டி.ஜி.பி. அலுவலகம் அருகே இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. ஏர்போர்ட் மூர்த்தியும் பதில் தாக்குதலில் ஈடுபட்டார்.

பாக்கெட்டில் வைத்திருந்த சிறிய கத்தியை எடுத்தும் தாக்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 பேர் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீஸ் நிலையத்தில் இருதரப்பு சார்பிலும் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் ஏர்போர்ட் மூர்த்தி மீதும், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீதும் மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

ஏர்போர்ட் மூர்த்தி மீது கொலை முயற்சி வழக்கும் பாய்ந்தது. இந்த வழக்கில் அவரை மெரினா போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஏர்போர்ட் மூர்த்தி ஓராண்டு குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார். அவர் தாக்கல் செய்த ஜாமீன் மனு சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டது. இதற்கிடையில் ஏர்போர்ட் மூர்த்தி புதிய வழக்கில் ராயப்பேட்டை போலீசாரால் மீண்டும் கைது செய்யப்பட்டார். வாடகை வீட்டை சொந்தம் கொண்டாடிய வழக்கில் புரட்சி தமிழகம் கட்சியின் மத்திய சென்னை மாவட்ட செயலாளர் பரந்தாமன் என்பவர் ஏற்கனவே கைதாகி உள்ளார்.

அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அந்த வழக்கிலும் ஏர்போர்ட் மூர்த்தி கைது செய்யப்பட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சைதாப்பேட்டை 18-வது கோர்ட்டில் ஏர்போர்ட் மூர்த்தி ஆஜர்படுத்தப்பட்டார். புதிய வழக்கில் போதுமான முகாந்திரம் இல்லாததால் அவரை நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட கோர்ட்டு மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

1 More update

Next Story