ஏர்போர்ட் மூர்த்தி கைது, அதிகார அத்துமீறலின் உச்சம் - சீமான் கண்டனம்

ஏர்போர்ட் மூர்த்தியை கைது செய்ததற்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது;
”புரட்சித் தமிழகம் கட்சியின் தலைவர் அன்பிற்குரிய அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தியைக் கைதுசெய்திருக்கும் திமுக அரசின் செயற்பாடு அடாவடித்தனமானது. காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்திற்கு புகார்கொடுக்கச் சென்ற அண்ணன் ஏர்போர்ட் மூர்த்தி மீது அதன் வாசலிலேயே வைத்து குண்டர்கள் தாக்குதல் தொடுத்ததும், தனியொரு ஆளாக நின்றவர் தற்காத்துக் கொள்ளவே முயன்றார் என்பதுமான காட்சிகள் காணொளிப்பதிவுகளாக ஊடகங்களில் வெளியானபோதும் பொய்வழக்கைப் புனைந்து, பாதிக்கப்பட்டவர் மீதே வழக்குத் தொடுத்துச் சிறைப்படுத்துவது அதிகார அத்துமீறலின் உச்சம்.
வெளிப்படையான பாசிச வெறியாட்டம்! இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிகாரத்திமிரிலும், பதவிப்போதையிலும் ஆட்டம்போடும் ஆட்சியாளர் பெருமக்களே! உங்களுக்கான நாட்கள் எண்ணப்படுகின்றன. உங்கள் அரசும், அதிகாரமும் வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை.”
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






