

சென்னை,
நாளுக்கு நாள் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்ற கோரிக்கை ரசிகர்களிடையே தீவிரமடைந்துள்ளது. உளுந்தூர்பேட்டையில் முதலில் புதிய கட்சியை தொடங்கிய அஜித் ரசிகர்கள், தற்போது குன்றத்தூரில் 2வதாக புதிய கட்சியை தொடங்கி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
முதல்-அமைச்சர் விஜய்யை போன்று நடிகர் அஜித்தும் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூரில் நடிகர் அஜித் ரசிகர்கள் 'அனைத்து நண்பர்கள் முன்னேற்றக் கழகம்' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கியுள்ளனர்.
இதையொட்டி குன்றத்தூரில் நடைபெற்ற கட்சியின் முதல் நிர்வாகிகள் அறிமுக கூட்டத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 100- க்கும் மேற்பட்ட அஜித் ரசிகர்கள் பங்கேற்றனர். நாளைய முதல்வரே பதவியேற்க வா என்ற வாசகங்கள் அடங்கிய பேனர்கள் வைக்கப்பட்டி ருந்தன. அதேபோல் நடிகர் அஜித் புகைப்படத்துக்கு பாலாபிஷேகம் செய்து நாளைய முதல் வர் அஜித் என கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் கட்சியின் தலைவர் பாபு கட்சி கொடியை அறிமுப்படுத்தினார். கட்சியின் சின்னமாக காரை அறிவித்தார். அதை தொடர்ந்து கட்சி நிர் வாகிகளுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. பின்னர் கட்சியின் தலைவர் பாபு நிருபர்க ளிடம் கூறுகையில், நடிகர் அஜித்தை 2031-ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல்-அமைச்சராக்கும் லட்சியத்துடன் கட்சி தொடங்கப்பட்டுள்ளது.
அஜித் ரசிகர்கள் ஒன்றிணைந்து மக்கள் நலனுக்காக பல்வேறு நலப்பணிகளை மாவட்ட வாரியாக நகரம், ஊராட்சி வாரியாக செய்ய வேண் டும். நடிகர் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி பல்வேறு பிரார்த்தனை களில் ஈடுபட்டு வருகிறேன், என்றார்.
சில நாட்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே அஜித் ரசிகர்கள் புதிதாக (தமக ) என்ற கட்சி தொடங்கி கொடியையும் அறிமுகப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. அஜித் ரசிகர்களின் இதுபோன்ற செயல்களால் தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது.
நடிகரும் ரேஸருமான அஜித் குமார், திரைப்படங்களில் நடித்துக் கொண்டும் இடையில் கார் பந்தயங்களிலும் பங்கேற்று வருகிறார். நடிகர் அஜித் அரசியலுக்கு வர மாட்டேன் என்றும், தமக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் துளியளவும் இல்லை என்றும் பல முறை பொதுவெளியில் தெளிவுபடுத்தியுள்ளார். எனினும் அவரது அரசியல் பிரவேசம் குறித்தான விவாதங்கள் தமிழ்நாட்டில் அவ்வப்போது எதிரொலித்து வருகிறது. ஆனால் இதுவரை அஜித் எந்தவொரு அரசியல் சார்ந்த கருத்தையும் வெளிப்படுத்தியதில்லை. ரசிகர்கள் தொடர்ந்து அரசியல் கட்சிகளை தொடங்கி வரும் நிலையில், அஜித்குமார் தரப்பில் இருந்து எந்த பதிலும் அதிகாரப்பூர்வமாக வரவில்லை தொடர்ந்து இந்த விவகாரத்தில் நடிகர் அஜித் மவுனம் காத்து வருவதாக கூறப்படுகிறது.