அஜித்குமார் கொலை வழக்கு: டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் முன்ஜாமீன் மனு தள்ளுபடி

டி.எஸ்.பி.யை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என நீதிபதி கேள்வி எழுப்பினார்
மதுரை,
சிவகங்கை மாவட்டம் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் போலீசாரால் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சி.பி.ஐ. அதிகாரிகள் தன்னை கைது செய்யாமல் இருப்பதற்காக டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் முன்ஜாமீன் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சி.பி.ஐ. தரப்பில் வழக்கறிஞர் முகைதீன் பாட்ஷா ஆஜராகி, “இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட காவலர்களுக்கு கோர்ட்டு ஜாமீன் வழங்கவில்லை. எனவே மனுதாரருக்கு முன்ஜாமீன் வழங்கக்கூடாது. அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியுள்ளது” என்று வாதிட்டார்.
இதனை கேட்ட நீதிபதி, “டி.எஸ்.பி.யை ஏன் இன்னும் கைது செய்யவில்லை” என்று கேள்வி எழுப்பினார். இந்த நிலையில், டி.எஸ்.பி. சண்முகசுந்தரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், முன்ஜாமீன் கோரிய மனுவை திரும்ப பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, டி.எஸ்.பி. சண்முகசுந்தரத்தின் முன்ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.






