தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் அஜிதா ஆக்னல்

தூத்துக்குடி மாவட்ட த.வெ.க பொறுப்பாளராக அஜிதா ஆக்னல் இருந்து வந்தார்.

தவெகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார் அஜிதா ஆக்னல்
Published on

தூத்துக்குடி,

தமிழக சட்டசபை தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, த.வெ.க., நாம் தமிழர் என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் 234 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் அறிவித்தார். இதில் விஜய் பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட உள்ளார். இதை தொடர்ந்து கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இதனிடையே தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அறிவித்த வேட்பாளர்கள் பட்டியலில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில், விஜயின் நண்பர் ஸ்ரீநாத் என்பவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். தமிழக வெற்றிக் கழககத்தின் முன்னாள் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக இருந்தவர் அஜிதா ஆக்னல். இவரது மாவட்ட செயலாளர் பதவி பறிக்கப்பட்ட நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பனையூரில் விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்தினார். அதைத் தொடர்ந்து தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கும் முயற்சி செய்தார். தமிழக சட்டசபை தேர்தலுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இடம்பெறும் என்று மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்த நிலையில் அவரது பெயர் இடம்பெறவில்லை. இதனால் சமீபகாலமாக விரக்தியில் இருந்து வந்தார்.

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்ட த.வெ.க பொறுப்பாளராக இருந்த அஜிதா ஆக்னல், இன்று (ஏப்.12) தூத்துக்குடியில் திமுக எம்.பி.யும் கட்சியின் துணைப்பொதுச்செயலாளருமான கனிமொழி முன்னிலையில் திமுகவில் இணைந்தார். தமிழக வெற்றிக் கழகத்தில் மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விஜய் காரை மறித்துப் போராடிய இவர், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் வேட்பாளர் பட்டியலிலும் தனது பெயர் இடம்பெறாததால் அதிருப்தி அடைந்து இந்த முடிவை எடுத்துள்ளதாக அவருடைய ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com