அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனுக்கு 3 நாள் போலீஸ் காவல்

அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் கடந்த 16-ம் தேதி கைது செய்யப்பட்டார்.
அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனுக்கு 3 நாள் போலீஸ் காவல்
Published on: 

சென்னை,

கோவை பெரியார் அறிவுலக நூலகத்துக்கு புத்தகங்களை கொள்முதல் செய்ததில் பெரும் ஊழல், முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக நூல்கள் வாங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த குழுவில் இடம் பெற்றிருந்த பிரபல எழுத்தாளர் பெருமாள் முருகன் பகீர் குற்றச்சாட்டை கூறினார்.

தி.மு.க. ஆட்சியில்தான் ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் இந்த ஊழல் முறை கேடு நடைபெற்றுள்ளது என்றும், இதுபற்றி விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் சார்பில் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது. அதேபோன்று தி.மு.க. சார்பிலும் தனி புகார் மனு கொடுக்கப்பட்டது.

கோவை பெரியார் அறிவுலகத்துக்கு புத்தகங்கள் கொள்முதல் செய்ததில் நடந்த முறைகேடு தொடர்பாக வழக்குப்பதிவு செய்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், நூலகங்களுக்கு ஏ.ஐ. மூலம் தயாரிக்கப்பட்ட புத்தகங்களை சப்ளை செய்த அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை கடந்த 16-ம் தேதி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

நூலகங்களுக்கு புத்தகங்கள் சப்ளை செய்த அகல் விளக்கு பதிப்பகத்துக்கு அரசுத் தரப்பில் ரூ.1.74 கோடி வழங்கியிருந்த நிலையில், அந்த நிறுவனத்தின் வங்கிக் கணக்கை லஞ்ச ஒழிப்புத்துறை முடக்கியுள்ளது. இதனையடுத்து, பதிப்பக உரிமையாளர் மோகனை மூன்று நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்கக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை மனு தாக்கல் செய்தது.

இந்த மனு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அகல் விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மோகன் உடனடியாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளதால், அவரிடம் விசாரணை நடத்த போதுமான கால அவகாசம் கிடைக்கவில்லை என வாதிடப்பட்டது.

விசாரணை இறுதியில் அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் மோகனை 3 நாள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி அனுமதி அளித்தார். விசாரணை முடிந்து நாளை மறுநாள் காலை 10.30 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார். இதனையடுத்து அவரை போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றனர்.

X