அழகர்மலை உச்சி நூபுரகங்கையில் கள்ளழகர் பெருமாளுக்கு இன்று தைலக்காப்பு திருவிழா

அழகர்மலை உச்சி நூபுர கங்கையில் கள்ளழகர் பெருமாளுக்கு இன்று தைலக்காப்பு திருவிழா நடைபெறுகிறது.
அழகர்மலை உச்சி நூபுரகங்கையில் கள்ளழகர் பெருமாளுக்கு இன்று தைலக்காப்பு திருவிழா
Published on

அழகர்கோவில்,

தைலக்காப்பு திருவிழா

மதுரை மாவட்டம் அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் தைல காப்பு திருவிழா நடைபெறும். அதன்படி நேற்று முன்தினம் இந்த ஆண்டுக்கான தைல காப்பு திருவிழா தொடங்கியது. அன்று மாலை மேஷ லக்கனத்தில் நவநீதகிருஷ்ணன் சன்னதி மண்டபத்தில் பரமபதநாதன் சேவையுடன் கள்ளழகர் பெருமாளுக்கு உற்சவம் தொடங்கியது. நேற்று இதே கோவிலில் கிருஷ்ணன் சன்னதியில் சீராப்பதிநாதன் சேவையும் நடைபெற்றது. இதில் சிறப்பு அலங்காரத்தில் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன் எழுந்தருளி அருள்பாலித்தார்.

இதை தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) 3-ம் திருநாள் திருவிழா நடக்கிறது. இதையொட்டி இன்று காலை 7.31 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் இருப்பிடத்தில் இருந்து கள்ளழகர் பெருமாள் அலங்காரத்துடன் பல்லக்கில் எழுந்தருளி சகல பரிவாரங்களுடன் புறப்பட்டு செல்கிறார். கள்ளழகர் பெருமாள் நூபுர கங்கைக்கு பல்லக்கில் அழகர்மலை, பாதையின் வழியாக செல்கிறார்.

தீர்த்தவாரி

அப்போது நூபுர கங்கை செல்லும் வழியில் உள்ள அனுமார் தீர்த்தம், கருட தீர்த்த எல்கைகளில் பெருமாளுக்கு பூஜைகள், தீபாராதனைகள் நடைபெறும். தொடர்ந்து அங்கிருந்து புறப்பாடாகி நூபுர கங்கைக்கு பகல் 12 மணிக்கு மேல் சென்று ராக்காயி அம்மன் கோவிலில் எழுந்தருளுவார். பகல் 1.15 மணிக்குள் தைல காப்பு கண்டருளி மாதவி மண்டபத்தில் பூஜைகள் நடைபெறும்.

இந்த மண்டபம் முழுவதும் பூமாலைகள், பழங்களால் அலங்கரிக்கப்பட்டு பின்னர் பெருமாளுக்கு திருதைலம் சாத்தப்படும். தொடர்ந்து அங்குள்ள தீர்த்த தொட்டியில் திருமஞ்சனமாகி தீர்த்தவாரி நடைபெறும். பின்னர் அங்குள்ள மண்டபத்தில் கள்ளழகர் பெருமாள் எழுந்தருளி ராஜாங்க திருக்கோலத்தில் பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.மேளதாளம் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் பெருமாள் வந்த வழியாகவே மலைப்பாதையில் சென்று மாலையிலே கோவிலுக்குள் போய் இருப்பிடம் சேருவார். இந்த திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், துணை ஆணையர் ராமசாமி மற்றும் கண்காணிப்பாளர்கள், உள்துறை அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com