அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 16 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்ற ரஞ்சித்குமாருக்கு கார் பரிசு!

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 16 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்ற ரஞ்சித்குமாருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி: 16 காளைகளை அடக்கி முதலிடத்தை பெற்ற ரஞ்சித்குமாருக்கு கார் பரிசு!
Published on

மதுரை,

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி மதுரை அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விழா விமரிசையாக நடைபெறும்.

அவனியாபுரத்தில் பொங்கல் தினத்தன்றும், தை 2-ம் நாள் பால மேட்டிலும், 3-ம் நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படும்.

இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு விழாவை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையிலான குழுவை மதுரை ஐகோர்ட்டு நியமித்தது. இந்த குழுவில் மதுரை மாவட்ட கலெக்டர் வினய், மதுரை போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம், சூப்பிரண்டு மணிவண்ணன், மாநகராட்சி கமிஷனர் விசாகன் உள்ளிட்ட அதிகாரிகளும், பிரமுகர்களும் இடம் பெற்று உள்ளனர்.

பொங்கல் பண்டிகையான நேற்று முன்தினம் அவனியாபுரத்திலும், மாட்டுப் பொங்கல் தினமான நேற்று பாலமேட்டிலும், உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது.

இந்நிலையில் அலங்காநல்லூரில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் கடைசி சுற்றில் களமிறங்கிய மாடுபிடி வீரர் ரஞ்சித் குமார் 16 காளைகளை அடக்கி முதலிடம் பிடித்தார். அவருக்கு கார் பரிசாக வழங்கப்படுகிறது. 2-வது இடம் பிடித்த மாடுபிடி வீரர் கார்த்திக்கிற்கு இரு சக்கர வாகனம் பரிசாக வழங்கப்படுகிறது.

14 காளைகளை தழுவிய கார்த்திக் 2-வது பரிசும், 13 காளைகளை தழுவிய கணேசன் 3-வது பரிசும் வென்றனர். முதலிடம் பிடித்த ரஞ்சித்குமாரின் சகோதரர் ராம்குமார் கடந்தாண்டு ஜல்லிக்கட்டில் முதல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் பரிசு பெற்ற ரரஞ்சித்குமாருக்கு பரிசாக ரூ.7 லட்சம் மதிப்புள்ள 4 பசுமாடுகளும் பரிசாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறந்த மாடுபிடி வீரர், சிறந்த காளைகளுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சர் சார்பில் பரிசாக கார் வழங்கப்படுகிறது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் குலமங்கலம் மாரநாடு என்பவரின் கருப்பன் என்ற காளை சிறந்த காளையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிட வந்த வெளிநாட்டு பயணிகள்..

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் 739 காளைகள், 688 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். ஜல்லிக்கட்டில் காளைகள் முட்டி ஒருவரும், மயங்கி விழுந்த ஒருவரும் என 2 பேர் உயிரிழந்தனர். போட்டியில் பங்கேற்ற காளைகள் முட்டியதில் காயமடைந்த 9 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com