அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் முதியவர் உயிரிழந்த சோகம்

கழுத்தில் மாடு குத்தியதில் முதியவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு: மாடு முட்டியதில் முதியவர் உயிரிழந்த சோகம்
Published on

மதுரை,

மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி இன்று கோலாகலமாக நடைபெற்றது. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் தொடர்ந்து 2-வது ஆண்டாக ஆயிரம் காளைகள் களம் கண்டன. இன்று நடைபெற்ற போட்டியில் பூவந்தியை சேர்ந்த மாடுபிடி வீரர் அபிசித்தர் 20 காளைகளை பிடித்து முதல் பரிசை வென்றார்.

நேற்று முன்தினம் (ஜன.14) அவனியாபுரத்திலும், நேற்று (ஜன. 15) பாலமேட்டிலும் ஜல்லிக்கட்டு போட்டி மிக சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இந்த சூழலில் மதுரை அலங்காநல்லூரில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை 7 மணியளவில் தமிழக துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று வீதம் 9 சுற்றுக்களாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி மாலை 6.15 மணியளவில் நிறைவடைந்தது.

இந்நிலையில் பெரியசாமி (வயது 66) என்ற முதியவர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை, மாடு சேகரிக்கும் இடத்தில் நின்று பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த காளை ஒன்று எதிர்பாராத விதமாக பெரியசாமியின் கழுத்தில் குத்தியது. இதில் படுகாயமடைந்த அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு மருத்துவ குழுவினர் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தனர்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பெரியசாமி உயிரிழந்தார். இதனிடையே அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள், மாட்டின் உரிமையாளர்கள், பார்வையாளர்கள் என மொத்தமாக 76 பேர் காயமடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com