மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் 6 மாதத்துக்குள் செய்து கொடுக்கப்படும் - ஐகோர்ட்டில் உத்தரவாதம்

மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் 6 மாதத்துக்குள் செய்து கொடுக்கப்படும் என ஐகோர்ட்டில் மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.
மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் 6 மாதத்துக்குள் செய்து கொடுக்கப்படும் - ஐகோர்ட்டில் உத்தரவாதம்
Published on

சென்னை ஐகோர்ட்டில் வைஷ்ணவி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "சென்னையில் கட்டப்பட்டுள்ள 32 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மற்றும் புதிதாக கட்டப்பட்டு வரும் ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகள் இல்லை. பல மெட்ரோ ரெயில் நிலையங்களில் நகரும் படிக்கட்டுகள் முறையாக இயங்குவது இல்லை. இதனால் பயணிகள் நீண்ட உயரத்தில் உள்ள படிக்கட்டுகளில் ஏறி, இறங்க சிரமம் அடைந்து வருகின்றனர்.

அதுவே மாற்றுத்திறனாளிகள் எனில் அவர்கள் கடும் இன்னலுக்கு ஆளாக நேரிடுகிறது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தின்படியும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் எளிதில் அணுகும் வகையிலான வசதிகள் இல்லை. இதுதொடர்பாக மாநில மாற்றுத்திறனாளிகள் நல ஆணையரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை" என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மெட்ரோ ரெயில் நிர்வாகம் தரப்பில், "சென்னையில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான அனைத்து வசதிகளும் 6 வாரங்களில் செய்து கொடுக்கப்படும். புதிதாக கட்டப்படும் ரெயில் நிலையங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகளுடன் கட்டப்படும்" என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு விசாரணையை நீதிபதிகள் 6 வார காலத்துக்கு தள்ளிவைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com