

சென்னை,
தேசிய மாணவர் படை (என்.சி.சி.) சார்பில் சென்னை தாம்பரம் விமானப்படை நிலையத்தில் அகில இந்திய அளவில் முகாம் நடந்தது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் பிரிவு என்.சி.சி. தலைவர் சுதீப் நம்பியத் முகாமை தொடங்கி வைத்தார். நேற்று தொடங்கிய இந்த முகாம் வருகிற 13-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
என்.சி.சி. விமான படை பிரிவின் 17 இயக்குனரகங்களை சேர்ந்த மொத்தம் 646 மாணவ-மாணவிகள் இதில் பங்கேற்று வருகின்றனர். இந்த முகாமில் பெண்களுக்கு அதிகாரமளித்தலில் ஒரு முக்கிய மைல் கல்லாக ஒரு என்.சி.சி. இயக்குனரகத்துக்கு தலா 16 மூத்த பிரிவு மாணவிகள் வீதம் அவர்களின் எண்ணிக்கை முதன் முறையாக உயர்த்தப்பட்டிருக்கிறது.
விமான இயக்கம், சுகாதாரம், தூய்மை, விமான மாதிரி உருவாக்கம், 22 ரக துப்பாக்கி சுடுதல், ஸ்கீட் ஷூட்டிங், அணிவகுப்பு. கூடாரம் அமைத்தல், ஓட்டம் ஆகிய போட்டிகள் மூலம் என்.சி.சி. வீரர், வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.
தாம்பரம் விமானப்படை நிலையத்தில் இந்த முகாம் முதல் முறை நடைபெறுவதாகவும், விரைவில் நாமக்கல் மற்றும் திருச்செங்கோட்டில் என்.சி.சி. மாணவ-மாணவிகளுக்கு டிரோன் பயிற்சி வழங்கப்பட இருப்பதாகவும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிகோபர் பிரிவு என்.சி.சி. தலைவர் சுதீப் நம்பியத் தெரிவித்தார்.