

சென்னை,
தமிழகத்தில் மகளிர் பயணம் என்ற பெயரில் அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக செல்லும் திட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில் அக்டோபர் 2-ந்தேதி முதல் (காந்தி ஜெயந்தி) இந்த திட்டம் 'வெற்றிப்பயணம்' என்ற பெயரில் விரிவுபடுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.
அதன்படி மாநகர மற்றும் நகர்ப்புறங்களில் எக்ஸ்பிரஸ், எல்.எஸ்.எஸ்., டீலக்ஸ் மற்றும் புறநகர் சாதாரண அரசு பஸ்களிலும் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம். மாவட்டங்களுக்கு இடையே பயணம் செய்ய சாதாரண அரசு பஸ்களிலும் இலவசமாக பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த இலவச பயண திட்டத்தால் தனியார் பஸ் உரிமையாளர்கள் பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, தனியார் பஸ் தொழிலை காப்பாற்றும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தியும், மகளிர் இலவச பயணத்தை எங்களுக்கும் விரிவுபடுத்தி மாற்றியமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தனி யார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது. அதன்படி, இன்று நள்ளிரவு 12 மணி முதல் நாளை நள்ளிரவு 12 மணி வரை தனியார் பஸ்கள் ஓடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், மினி பஸ்கள் அனைத்தும் நாளை வழக்கம்போல் இயங்கும் என்று உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், “தமிழ்நாட்டில் தனியார் பஸ்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் நாளை (புதன்கிழமை) வரை இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கும் மினி பஸ்களுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. தமிழ்நாடு மினி பஸ் உரிமையாளர்கள் சம்மேளன மாநில உயர்மட்டக்குழுவின் ஆலோசனை முடிவின்படி தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மினி பஸ்களும் வழக்கம்போல் தொடர்ந்து இயங்கும்.
அந்த வகையில் தமிழ்நாடு முழுவதும் நடக்கவிருக்கும் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தத்தில் மினி பஸ்கள் கலந்துகொள்ளாது. அனைத்து மினி பஸ்களும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.