

சென்னை,
தமிழகம் முழுவதும் 38 மாவட்டங்களில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் செயல்பட்டு வருகிறது. தினமும் மதியம் 12 மணிக்கு தொடங்கி இரவு 10 மணி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகிறது. தினமும் 100 கோடிக்கு அளவுக்கு மது விற்பனையாகிறது. அதுவும் வார விடுமுறை மற்றும் பொங்கல், தீபாவளி, புத்தாண்டு போன்ற விடுமுறை தினங்களில் வருமானங்கள் இரட்டிப்பாகும்.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு நாளை (பிப்ரவரி 1ம் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தைப்பூசம் மற்றும் வள்ளலார் நினைவு தினத்தை முன்னிட்டு நாளை (ஞாயிற்றுக்கிழமை) தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் ராமலிங்கர் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் பார்கள் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் (FL1) மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனைச் சார்ந்த பார்கள், FL2 உரிமம் கொண்ட கிளப்புகளைச் சார்ந்த பார்கள், FL3 உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும்.
FL11 வரை உரிமம் கொண்ட மதுபான விற்பனையங்கள் மற்றும் மதுபான கூடங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு 01.02.2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று வடலூர் ராமலிங்கர் நினைவு நாள் அன்று மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால் மதுபானம் விற்பனை விதிகளின்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது