திமுக செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் - அண்ணாமலை

கோவில் மண்டபத்தின் மேற்கூரை விழுந்து உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.
திமுக செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும் - அண்ணாமலை
Published on

சென்னை,

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவில் சன்னதி முன் மண்டபத்தில் தங்கி இருந்த தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் மீது, நள்ளிரவில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்து ஒரு பெண் உயிரிழந்த செய்தி, மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள், விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்.

கடந்த 2022ஆம் ஆண்டு ஜூலை மாதம்தான், ஆலய கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு, வரிசை வளாக மண்டபங்கள், மற்றும் கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்தான், அமாவாசை மண்டபம் மற்றும், குங்கும கூடம் முதலானவற்றைத் திறந்து வைத்தார் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின். கும்பாபிஷேகம் நடந்து நான்கு ஆண்டுகள் கூட முழுமை பெறவில்லை. இந்த நிலையில், கோவில் மண்டபத்தின் மேற்கூரை இடிந்து விழுவது என்பது, திமுக அரசு, எந்த லட்சணத்தில், ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டு வருகிறது என்பதற்கான வெளிப்படையான சான்றாகும்.

பக்தர்களின் காணிக்கை நிதி பல கோடிகளைச் செலவு செய்தோம் என்று கணக்கு காட்டும் திமுக அரசு, உண்மையில், பக்தர்களின் உயிரை எத்தனை துச்சமாக நினைத்துக் கொண்டிருக்கிறது என்பதே இதன் மூலம் தெரிய வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், இவர்கள் செய்ததாகக் கூறும் அனைத்து ஆலயத் திருப்பணிகளையும் ஆய்வு செய்ய வேண்டும்.

இந்த துயர சம்பவத்திற்குப் பின்னணியில் உள்ள அனைவரின் மீதும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கோபாலபுரத்திற்கு முறைவாசல் செய்வதே தனது பணி என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறியதற்கு பொதுமக்களிடம் பதில் சொல்லியே தீர வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com