புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை
Published on

சீர்காழி:

சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் அனைத்து பஸ்களும் வந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

புறவழி சாலையிலேயே...

சீர்காழியில் புதிய பஸ் நிலையம் உள்ளது. இந்த புதிய பஸ் நிலையத்திற்குள் நீண்ட தூர பஸ்கள் உள்ளே வராமல் புறவழி சாலையிலேயே பயணிகளை ஏற்றி இறக்கி விட்டு செல்கின்றன. இதனால் பகல் மற்றும் இரவு நேரங்களில் பயணிகள் கடும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றன.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கைகள் விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் உள்ளிட்டோர் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

சமாதான கூட்டம்

இந்த நிலையில் அனைத்தும் பயணிகள் பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டி சீர்காழி சேர்ந்த பொதுமக்கள் மாபெரும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர். இதனை தொடர்ந்து சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் நேற்று சமாதான கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தாசில்தார் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சீர்காழி மோட்டார் வாகன ஆய்வாளர் விஸ்வநாதன், சமூக ஆர்வலர் ஜெக சண்முகம், சீர்காழி அரசு கிளை போக்குவரத்து கழக மேலாளர்கள் வடிவேல், சிதம்பரம் கபிலன், அரசு விரைவு போக்குவரத்து கழக நாகப்பட்டினம் கிளை மேலாளர் ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அனைத்து பஸ்களும் புதிய பஸ் நிலையத்திற்குள்...

கூட்டத்தில் மயிலாடுதுறை- சிதம்பரம் மார்க்கமாக வரும் அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களும் சீர்காழி புதிய பஸ் நிலையத்திற்குள் வந்து செல்ல வேண்டும். இதேபோல் நீண்ட தூர பயணிகள் பஸ்சும் புதிய பஸ் நிலையத்திற்கு வந்து செல்ல வேண்டும். சீர்காழி பஸ் நிலையத்திற்குள் வராமல் புறவழிச் சாலை வழியாக செல்லும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் பல்வேறு இயக்கங்களை சேர்ந்த ராஜேஷ், தில்லை நடராஜன், சுதாகர், சண்முகம், மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முடிவில் சப் - இன்ஸ்பெக்டர் அசோக் ராஜ் நன்றி கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com