தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வரும் 11-ம் தேதி சென்னைக்கு வர உத்தரவு

அரசியல் நகர்வுகள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வரும் 11-ம் தேதி சென்னைக்கு வர உத்தரவு
Published on: 

சென்னை,

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) எம்.எல்.ஏ.க்களின் அவசர ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் வருகிற 11-ம் தேதி (நாளை மறுநாள்) அன்று சென்னையில் நடைபெற உள்ளது. இதற்கு தவெக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் நாளைக்குள் சென்னைக்கு வர வேண்டும் என்று கட்சித் தலைமை அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சிலர் பொதுவெளியில் தொடர் சர்ச்சைகளில் சிக்கி வருவது கட்சியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கட்சித் தலைமை கருதுகிறது. குறிப்பாக, தொகுதி மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய நபர் ஒருவரை தவெக எம்.எல்.ஏ. ரவிசங்கர் தாக்கிய விவகாரம், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், இது குறித்த விசாரணையைத் தவெக மேற்கொண்டு வருகிறது.

மக்கள் மத்தியில் கட்சியின் நன்மதிப்பைக் காக்கும் வகையில், எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பொதுவெளியிலும் தங்களது தொகுதிகளிலும் எவ்வாறு கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து இந்தக் கூட்டத்தில் தவெக தலைவரும் முதல்-அமைச்சருமான விஜய் மற்றும் கட்சியின் மூத்த நிர்வாகிகள் கடுமையான அறிவுறுத்தல்களையும் எச்சரிக்கைகளையும் வழங்க உள்ளதாகத் கூறப்படுகிறது.

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்த 4 எம்.எல்.ஏ.க்களுக்குத் தகுதி நீக்கம் தொடர்பாகச் சபாநாயகர் அண்மையில் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இது தொடர்பான சட்டப்பூர்வ மற்றும் அரசியல் நகர்வுகள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

X