

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் நேற்று வழக்குகளை விசாரிக்க தொடங்கினர். அப்போது, வக்கீல் ஏ.பி.சூர்யபிரகாசம், "தமிழ்நாடு முழுவதும் தி.மு.க.வினர் வாக்காளர்களுக்கு ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள பரிசு கூப்பன்களை வினியோகம் செய்து வருகின்றனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், தி.மு.க. வேட்பாளர்கள் இதுபோல கூப்பன்களை வழங்கி, ஓட்டுகளை சேகரித்து வருகின்றனர்.
இதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும். இதுகுறித்து வழக்கு தொடர உள்ளேன். அந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்கவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.
அதே போல, சென்னை துறைமுகம் சட்டசபை தொகுதியில், அ.தி.மு.க. சார்பில் ராயபுரம் ஆர்.மனோகர் போட்டியிடுகிறார். அவர், ரொக்க பணம் வழங்குவதற்கான டோக்கன்களை வினியோகம் செய்து வருகிறார். இதை தடுக்கவேண்டும் என்று வக் கீல் ஷியாம்குமார் என்பவர் முறையீடு செய்தார். இந்த 2 முறையீடுகளையும் கேட்ட நீதிபதிகள், வழக்கு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்.