தி.மு.க. ஆட்சியில் ரூ.4,730 கோடி மணல் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை

கனரக எந்திரங்களை விற்பனை செய்த நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ஜி.பி.எஸ். தரவுகள் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளன.
தி.மு.க. ஆட்சியில் ரூ.4,730 கோடி மணல் முறைகேடு புகார்: லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை
மணல் முறைகேடு புகார்
Published on: 

சென்னை,

தமிழகத்தில் முந்தைய தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் ரூ.4,730 கோடி மதிப்பிலான ஆற்று மணல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை விரிவான விசாரணையை தொடங்கியுள்ளது. அமலாக்கத்துறை அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை பாய்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஒப்பந்ததாரர்களுக்கு நோட்டீஸ்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வந்த 28 ஆற்று மணல் குவாரிகளில், அரசு அனுமதித்த அளவை விடப் பல மடங்கு கூடுதலாகவும், விதிகளை மீறியும் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டதாக அமலாக்கத்துறை குற்றம் சாட்டியிருந்தது. இதில் பெரும் முறைகேடுகள் அரங்கேறியுள்ளதாக கூறி ஆதாரங்களை வழங்கியிருந்தது.

முதற்கட்ட விசாரணை

இதன் அடிப்படையில், முறைகேட்டில் தொடர்புடைய முக்கிய ஒப்பந்ததாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை தற்போது விசாரணை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது முறைப்படி வழக்குப்பதிவு செய்வதற்கு முன்பாக, முறைகேட்டின் உண்மைத்தன்மையை முழுமையாக உறுதி செய்வதற்காக முதற்கட்ட விரிவான விசாரணை தீவிரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கை பதிவு

இது தொடர்பாக கடந்த 2024-ம் ஆண்டு ஜூன் 13-ந் தேதியே, சட்டவிரோத மணல் கொள்ளை குறித்த அனைத்து ஆதாரங்களுடன் அப்போதைய தமிழக டி.ஜி.பி.யிடம் அமலாக்கத்துறை விரிவான அறிக்கை ஒன்றை ஒப்படைத்திருந்தது. அதில், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து சட்டப்படியான விசாரணை நடத்த கோரியிருந்தது.

நினைவூட்டல் கடிதம்

அதன்பின்னர் மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, த.வெ.க. அரசு புதிதாக பொறுப்பேற்றது. இதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 18-ந் தேதி இந்த மணல் கொள்ளை விவகாரம் தொடர்பாக மீண்டும் ஒரு நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டதாக தெரிகிறது. இதற்கிடையே, சட்டவிரோத மணல் கொள்ளை தொடர்பாக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை ஏற்கனவே வழக்குப்பதிவு செய்து தனியாக விசாரணை நடத்தி வருகிறது.

அதிநவீன தொழில்நுட்ப ஆதாரங்கள்

அமலாக்கத்துறை நடத்திய இந்த விசாரணையின் ஒரு பகுதியாக, உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் ஐ.ஐ.டி. தொழில்நுட்ப நிறுவனத்தின் கீழ் செயல்படும் நிபுணர்களின் உதவியுடன், மேம்பட்ட அறிவியல் தொழில்நுட்பங்கள் மூலம் துல்லியமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

ரூ.4,730 கோடி

தமிழகம் முழுவதும் உள்ள 28 ஆற்று மணல் குவாரிகளில் எந்த அளவுக்கு ஆழமாக சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டுள்ளது என்பது நவீன ஜியோ ஸ்கேனிங் மற்றும் ட்ரோன் தொழில்நுட்பங்கள் மூலம் அளவிடப்பட்டது. இந்த ஆய்வில், அனுமதிக்கப்பட்ட வரம்பை தாண்டி மணல் அள்ளப்பட்டதும், அதன் மூலம் ரூ.4,730 கோடி அளவுக்கு சட்டவிரோத பணப்பரிவர்த்தனை நடைபெற்றதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிக்க வைத்த ஜி.பி.எஸ். தரவுகள்

மணல் திருட்டுக்கு பயன்படுத்தப்பட்ட எக்ஸ்கவேட்டர் போன்ற கனரக எந்திரங்களை விற்பனை செய்த நிறுவனங்களிடம் இருந்து பெறப்பட்ட ஜி.பி.எஸ். தரவுகள் இந்த வழக்கில் முக்கிய ஆதாரமாக மாறியுள்ளன. அந்த எந்திரங்கள் எந்தெந்த இடங்களில், எத்தனை மணி நேரம் இயக்கப்பட்டன, எந்த நேரத்தில் மணல் அள்ளப்பட்டது போன்ற துல்லியமான தகவல்கள் இதன் மூலம் சேகரிக்கப்பட்டுள்ளன.

அமலாக்கத்துறை நிபுணர்கள்

மேலும், ஜியோ பென்சிங் உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் எந்திரங்களின் செயல்பாடுகள் துல்லியமாக கண்காணிக்கப்பட்டன. இந்த தொழில்நுட்பத் தரவுகளை, அரசு அனுமதித்த குவாரிகளின் ஜி.பி.எஸ். எல்லைகளுடனும், அனுமதிக்கப்பட்ட எந்திரங்களின் எண்ணிக்கையுடனும் அமலாக்கத்துறை நிபுணர்கள் ஒப்பிட்டு பார்த்தனர்.

இந்தஆய்வில், மணல் அள்ளுவதற்கு பயன்படுத்தப்பட்ட எந்திரங்கள், அரசு வரையறுத்த எல்லைகளை கடந்து, விதிகளை முற்றிலும் மீறி இயக்கப்பட்டிருப்பது நூற்றுக்கு நூறு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையிலேயே தற்போது லஞ்ச ஒழிப்புத் துறை தனது முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com