

விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் தூய்மைப் பணியாளர்கள், தங்களது ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ தொகையை உரிய கணக்குகளில் செலுத்தாத ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டித்து திடீர் பணிப்புறக்கணிப்பு மற்றும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் நகராட்சிப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் ஒப்பந்த முறையில் தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களின் மாதாந்திர ஊதியத்திலிருந்து குறிப்பிட்ட தொகை, வருங்கால வைப்பு நிதி (பி.எப்) மற்றும் மருத்துவக் காப்பீடு (இ.எஸ்.ஐ)-க்காகத் தொடர்ந்து பிடித்தம் செய்யப்பட்டு வந்தது. எனினும், அவ்வாறு பிடித்தம் செய்யப்பட்ட பல மாதங்களுக்கான நிதி, பணியாளர்களின் தனிநபர் கணக்குகளில் முறையாகச் செலுத்தப்படாமல் ஒப்பந்த நிறுவனங்களால் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாகப் பணியாளர்கள் குற்றம் சாட்டினர்.
பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட முழுமையான பி.எப் மற்றும் இ.எஸ்.ஐ நிலுவைத் தொகையை உடனடியாகச் சம்பந்தப்பட்ட கணக்குகளில் வரவு வைக்க வேண்டும். தொழிலாளர் நல விதிமுறைகளை மீறிச் செயல்படும் ஒப்பந்த நிறுவனங்கள் மீதும், அதனை முறையாகக் கண்காணிக்கத் தவறிய நகராட்சி நிர்வாகத்தின் மீதும் தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். நிலுவையில் உள்ள இதர ஊதியப் பலன்களைத் தாமதமின்றி வழங்க வேண்டும்.
ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்களின் இந்தத் தொடர் பணிப்புறக்கணிப்புப் போராட்டம் காரணமாக, கோட்டக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் குப்பைகள் தேங்கிச் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது. நகராட்சி அதிகாரிகள் உடனடியாகப் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் எனப் பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.