செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை

சம்பாதிப்பதற்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனத்தை குறிவைப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
செபி தலைவர் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க வேண்டும் - அண்ணாமலை
Published on

திருப்பூர்,

அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் உலகின் பெரும் நிறுவனங்களில் நடைபெறும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம். இதன் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது.

இந்த நிலையில், அதானி குழும ஊழல் புகாரில் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில், இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை கட்டுப்பாட்டு ஆணையமான செபியின் தலைவர் மாதபி புரி புச் தனது கணவருடன் பல்லாயிரக்கணக்கான பங்குகளை வாங்கியிருந்ததாக ஹிண்டன்பர்க் நிறுவனம் ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை அதானி குழுமம் மறுத்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, "சம்பாதிப்பதற்காக ஹிண்டன்பர்க் நிறுவனம் அதானி நிறுவனத்தை குறிவைக்கிறது. ஹிண்டன்பர்க் போல வருங்காலத்தில் நிறைய தாக்குதல்கள் இந்தியா மீது தொடுக்கப்படும். இந்தியா வலிமையாக இருக்கிறது என்பதால் உலகளவில் இதுபோன்ற சதி நடக்கிறது.

செபி தலைவர் மாதபி புச் மீது ஹிண்டன்பர்க் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை அரசு முழுமையாக விசாரிக்க வேண்டும். ஹிண்டன்பர்க் ஏற்கனவே அதானி புலி வருகிறது அம்பானி புலி வருகிறது என்று கூறினார்கள். ஆனால் கழுதை புலி கூட வரவில்லை. இந்த முறை செபி புலி வந்திருக்கிறது. அதையும் விசாரிப்போம்" என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com