

சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் எஸ்.ரகுபதி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய மூன்று மாதங்களுக்கான மகளிர் உரிமைத் தொகையான 3,000 ரூபாயை மொத்தமாக வழங்கி, 1 கோடியே 32 லட்சம் பெண்களுக்கு முதல்-அமைச்சர் ஓர் இன்ப அதிர்ச்சியைத் தந்துள்ளார். "2,000 ரூபாய் தரப்போகிறேன்" என்று சொல்லிக் கொண்டிருக்கும் எடப்பாடி பழனிசாமியின் வாயை, சொன்னதைச் செய்து காட்டும் நம் முதலமைச்சர் இன்றைக்குத் தைத்து விட்டார். இந்தத் தொகையை அறிவித்துவிட்டு வழங்கினால், எதிர்க்கட்சிகள் உடனடியாக நீதிமன்றத்திற்குச் சென்று தடை உத்தரவு வாங்கி விடுவார்கள் என்பதால், பெண்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தப் பயன் தடையின்றி சேர வேண்டும் என இன்று காலையிலேயே முதல்-அமைச்சர் இதனை வழங்கியுள்ளார்.
மக்களின் துன்பங்களை நீக்கக்கூடிய சக்திமிக்க உதய சூரியனாக முதல்-அமைச்சர் விளங்குகிறார். பாஜகவும், அதிமுகவும் எத்தனை கூட்டுச் சதிகள் செய்தாலும், திராவிட மாடல் 2.0 அரசு அமைவதையோ அதன் மூலம் மக்களுக்கு கிடைக்க உள்ள நன்மைகளையோ நிச்சயமாக தடுத்து நிறுத்த முடியாது. முதல்-அமைச்சர் ஸ்டாலினின் அதிரடி என்பது "சொல்லல்ல செயல்" என்பதாகும்; அவர் இந்தியாவே வியக்கும் வகையில் பல திட்டங்களைத் தந்து, மத்திய அரசின் மக்கள் விரோதத் திட்டங்களுக்கும் தமிழ்நாட்டை வஞ்சிக்கும் திட்டங்களுக்கும் எதிராக முதல் குரல் கொடுக்கும் தலைவராகத் திகழ்கிறார்.
கடந்த இரண்டு மாதங்களுக்குள்ளாகவே தமிழ்நாட்டு மக்களுக்கு 9,000 ரூபாய் கிடைத்திருக்கிறது; வரலாற்றிலேயே எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில், தேர்தலுக்கு முன்பே வாக்குறுதிகளை நிறைவேற்றி வரும் ஆட்சி நம் தலைவரின் ஆட்சி. மூன்று மாதங்களுக்கு தலா 1,000 ரூபாய் தந்து 2,000 ரூபாய் போனசாக தந்திருக்கிறார் நம் முதல்-அமைச்சர். வறுமையை ஒழிக்கும் சமூக நலத் திட்டங்களை "ரேவடி கலாச்சாரம்" என்று கொச்சைப்படுத்தினார் பிரதமர் மோடி. மகளிருக்குச் சேமிப்பைத் தரும் விடியல் பயணத் திட்டத்தையும் வரிப்பணத்தை வீணாக்கும் செயல் என்று விமர்சித்தார். ஆனால், எங்கள் தலைவர் இதனை "மக்களை வாழ வைக்கும் செயல்" என்று கூறுகிறார். விடியல் பயணத் திட்டத்தால் மெட்ரோ ரெயில் வருவாய் பாதிக்கப்படுவதாகச் சொன்னார் பிரதமர் மோடி. ஆனால் மெட்ரோ ரெயில் வருவாய் பாதிக்கப்படவில்லை.
பெரிய கார்ப்பரேட்டுகளுக்காகக் கடந்த ஐந்தரை ஆண்டுகளில் 16 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கான பொதுத்துறை வங்கிக் கடன்களைத் தள்ளுபடி செய்த மத்திய பாஜக அரசு, பெண்களுக்கு வழங்கப்படும் 1,000 ரூபாய் மீது மட்டும் வன்மத்தைக் காட்டுகிறது. பெண்களுக்கு வழங்கப்படும் பணம் அப்படியே டாஸ்மாக் கடைகள் மூலம் திரும்ப வசூலிக்கப்படுகிறது என்று கூறி தமிழ்நாட்டு மக்களைக் கொச்சைப்படுத்துவதுதான் பாஜகவின் தொழிலாக இருக்கிறது. அதிமுகவும் இந்த வன்மத்தைத் தான் கக்கிக்கொண்டு இருக்கிறது. ஆனால் பெண்கள் தங்கள் கையில் 5,000 ரூபாய் நோட்டுகளைக் காண்பித்து, மகிழ்ச்சியோடு கடைவீதிக்குச் செல்லும் காட்சியை நாம் காண்கிறோம்.
தமிழ்நாட்டின் இத்திட்டத்தைப் பின்பற்றி மராட்டியம் மற்றும் டெல்லி போன்ற மாநிலங்களில் தேர்தலுக்காக இத்திட்டத்தை அறிமுகப்படுத்திய பாஜக, தேர்தல் முடிந்தவுடன் பயனாளிகளைக் குறைத்துவிட்டது. தமிழ்நாட்டில் பயனாளிகளின் எண்ணிக்கை 1.16 கோடியிலிருந்து 1 கோடியே 31 லட்சத்து 69 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் மராட்டியத்தில் தேர்தல் முடிந்தவுடன் 26 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
மத்திய அரசு கல்விக்கான நிதி மற்றும் நூறுநாள் வேலைக்கான நிதியை முடக்கிய நிதி நெருக்கடியிலும், இத்திட்டத்தை விரிவுபடுத்தியவர் நம் முதல்-அமைச்சர்; இது அவர் மக்கள் மீது கொண்டுள்ள அன்பைக் காட்டுகிறது; இத்திட்டத்தைப் பின்பற்றி தற்போது 12 மாநிலங்களில் இத்தகைய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்தைச் சகித்துக் கொள்ள முடியாத பாஜக மற்றும் அதிமுகவினர், சட்டமன்றத் தேர்தலைச் சாக்காக வைத்து நீதிமன்ற வழக்குகள் மூலம் முடக்கச் சதி செய்தனர். இதை உணர்ந்துதான் பிப்ரவரி, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கான தொகையை முதல்-அமைச்சர் முன்கூட்டியே வழங்கியுள்ளார். விடியல் பயணத் திட்டம் சாத்தியமில்லை என்றும், பேருந்து ஓட்ட முடியாது, டயர் வாங்க முடியாது என்றும் எள்ளி நகையாடிய எடப்பாடி பழனிசாமியின் கூற்றுகளைப் பொய்யாக்க முதல்-அமைச்சர் சாதித்துக் காட்டியுள்ளார்.
அதிமுக ஆட்சியின் கடன்களைத் தீர்த்ததோடு, கஜானா காலியாக இருந்த நிலையிலும் விடியல் பயணத் திட்டத்தை உடனே வழங்கினோம்; மேலும் பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் சேமிப்பு கிடைத்தது. எடப்பாடி பழனிசாமி மடிக்கணினித் திட்டம், தாலிக்குத் தங்கம் போன்ற திட்டங்களை நிறுத்திவிட்டுச் சென்றவர்.
தேர்தல் நேரத்தில்தான் கோடை கால நிதி வழங்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தவறானவை; பொங்கலுக்கு 3,000 ரூபாய் வழங்கியதும் இத்தகைய ஒரு மக்கள் நலச் செயல்தான். திராவிட மாடல் 2.0 ஆட்சியில் இன்னும் பல புரட்சிகரமான திட்டங்கள், கல்வி மற்றும் பொருளாதாரத்தை உயர்த்தும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும். திட்டங்களை முடக்கச் சதி நடந்தாலும், அதை எதிர்த்துப் போராடி வெல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.