வண்டலூரில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமையா? - போலீசார் விளக்கம்

மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் வாலிபரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.
வண்டலூரில் அரசு பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமையா? - போலீசார் விளக்கம்
Published on: 

சென்னை,

செங்கல்பட்டு மாவட்டம், கண்டிகை அருகே உள்ள அரசு உயர் நிலைப்பள்ளியில் நேற்று மாலை சுற்றுச்சுவரைத் தாண்டி உள்ளே நுழைந்த வாலிபர் ஒருவர், மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. மேலும் மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறப்படும் வாலிபரை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து தாம்பரம் மாநகர காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

தாம்பரம் மாநகர காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட கண்டிகை கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் மாணவி பாலியல் துன்புறுத்தல் தொடர்பானதாகக் கூறப்படும் ஒரு சம்பவம் குறித்து புகார் பெறப்பட்டது. புகார் கிடைத்த உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு, மூத்த பெண் காவல் அதிகாரிகளின் மேற்பார்வையில், பெண் காவல் ஆய்வாளர் மூலம் துரிதமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, தொடர்புடைய அனைத்து ஆதாரங்களும் உடனடியாக சேகரிக்கப்பட்டு, கவனமாக சரிபார்க்கப்பட்டன. பள்ளி வளாகம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிடைக்கப்பெற்ற கண்காணிப்பு கேமரா காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டன. பாதிக்கப்பட்ட மாணவிக்கு மருத்துவப் பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டது. மேலும், இவ்விவகாரத்துடன் தொடர்புடைய சாட்சிகளிடம் விரிவாக விசாரணை நடத்தப்பட்டது. கிடைக்கப்பெற்ற பிற அறிவியல் மற்றும் உறுதிப்படுத்தும் ஆதாரங்களும் கவனமாக ஆய்வு செய்யப்பட்டன.

இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையிலும், சம்பந்தப்பட்ட மாணவியின் வாக்குமூலம் மற்றும் சேகரிக்கப்பட்டு சரிபார்க்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையிலும், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி அரசு பள்ளியில் அத்தகைய சம்பவம் நடைபெற்றது என்பதை உறுதிப்படுத்தும் எந்தவொரு ஆதாரமும் இதுவரை கிடைக்கப்பெறவில்லை.

எனினும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேற்கண்ட தகவல்களை கருத்தில் கொண்டு. குழந்தையின் நலன் கருதி, சரிபார்க்கப்படாத தகவல்களைப் வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com