கூட்டணி விவகாரம்: 'ஒன்று சேர்ந்தால்தான் நோக்கம் நிறைவேறும்' - ஆர்.பி.உதயகுமார் சூசகம்

திமுக எதிர்ப்பு என்பது பிரிந்து நிற்பதால் சிதைந்துவிடக்கூடாது என ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
மதுரை,
முன்னாள் அமைச்சரும், அதிமுக துணை பொதுச்செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;
அதிமுக, பிரதான கட்சியாக திமுகவை எதிர்க்கிறது. தவெக, நாதக, பாமக அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரும் திமுகவை எதிர்க்கிறார்கள். எதிர்க்கும் எல்லோரும் ஒன்று சேர்ந்தால்தான் எதிர்ப்பின் நோக்கம் நிறைவேறும். திமுகவில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் திருமாவளவன் போன்றோர் ஆட்சிக்கு மாறான கருத்துகளை சொல்லுகின்றனர். 20% ஆதரவு 80% எதிர்ப்பு எனும் நிலையில் உள்ளனர்.
திமுகவை எதிர்க்கும் கட்சிகளிலேயே 50 ஆண்டு கால வரலாறும் மக்கள் நம்பிக்கையும் கொண்ட தலைவராக எடப்பாடி பழனிசாமி உள்ளார். எனவே, திமுக எதிர்ப்பு என்பது பிரிந்து நிற்பதால் சிதைந்துவிடக்கூடாது. அனுபவத்தின் அடிப்படையில் மக்களுக்கு விடியல்கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில்தான் எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுக்கிறார். எதிர்ப்பவர்கள் ஒன்று சேர்ந்தால் தான் நோக்கம் நிறைவேறும்"
இவ்வாறு அவர் பேசினார்.






