

மதுரை,
மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
மத்திய அரசு உணவுப் பொருட்களுக்கு ஒரிரு சதவீதம் ஜி.எஸ்.டி வரி போடுகிறது. இதனை தமிழகத்தின் விலைவாசி உயர்வுடன் ஒப்பிட வேண்டாம். அதிமுக ஆட்சியில் வெங்காயம் உள்ளிட்ட உணவு பொருட்கள் இறக்குமதி செய்யப்பட்டு விலைவாசி உயர்வு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
திமுக கூட்டணி கட்சிகள் திமுகவிடம் தாலி கட்டிய மனைவி போல் உள்ளன. கூட்டணி என்பது தேர்தல் நேரத்திற்குத்தான். வாக்குகள் சிதறக்கூடாது என்பதற்காகத்தான். ஆனால், திமுக ஆட்சியில் நிலவும் பிரச்சினைகளை கண்டு கொள்ளாமல் விசிக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளன.
இந்தியாவிலேயே பட்டியலினம் மக்கள், பெண்கள் அதிகமாக பாதிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று புள்ளி விவரம் கூறுகிறது. தினம் தினம் இளம்பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். திமுக கூட்டணியில் கட்சிகள் பவ்யமாக இருக்கின்றன. கம்யூனிஸ்ட்கள் ஏழை, எளிய மக்களுக்காக குரல் கொடுக்காமல் சீட் வாங்கிவிடத்தான் நினைக்கிறார்கள்.
2026 ல் திமுக எதிர்க்கட்சியாக கூட அமர முடியாது. 2011ல் நடந்தது போலத்தான் இப்போதும் நடக்கப்போகிறது. மக்கள் கொதித்துப்போய் இருக்கிறார்கள். ஆளும் கட்சிக்கு எதிரான மனநிலை இல்லை என்பதை முதல்-அமைச்சர் யாரிடம் கேட்டார்? சாதாரண மக்களை சந்தித்து பேசினால் மட்டுமே மக்கள் பிரச்சினை தெரியவரும். சாதனைகளை சொல்லிச் சொல்லி ஓட்டு கேளுங்கள். ரியல் ஹீரோ எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்-அமைச்சர் ஆவார்.
இவ்வாறு அவர் கூறினார்.