

சென்னை,
பாஜகவுடன் நட்பு பாராட்டுகிறதா என்ற கேள்விக்கு அரசியலில் யாரும் நிரந்தர எதிரி கிடையாது என்று திமுக எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு பதில் அளித்துள்ளார்.
தொகுதி மறுவரையறை குறித்து ஆலோசனை நடத்த முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் அனைத்து கட்சிகளின் எம்பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை திமுக, அதிமுக, பாமக, தேமுதிக, மநீம உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புறக்கணித்தன. தவெக கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக, சிபிஐ, சிபிஎம், ஐயூஎம்எல் மற்றும் மதிமுக உள்ளிட்ட கட்சிகளின் 19 எம்பிக்கள் பங்கேற்றன.
இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறை தேவையில்லை என்றும், 543 தொகுதிகள் என்ற எண்ணிக்கையே தொடர வேண்டும் என்றும் ஆலோசித்து முடிவுகள் எடுக்கப்பட்டது. இதனிடையே பாஜக கொண்டு வரும் தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு திமுக ஆதரவு கொடுக்க போவதாக தவெக குற்றம்சாட்டி இருக்கிறது. அதேபோல் திமுக தரப்பில் தொடக்கம் முதலே நியாயமான தொகுதி மறுசீரமைப்பு என்ற கோரிக்கை வைக்கப்பட்டது.
அந்த நிலைப்பாட்டில் திமுக இப்போதும் தொடர்வதாக திமுக தரப்பில் கனிமொழி அறிவித்தார். இந்த நிலையில் சென்னையில் திமுக சார்பாக ரத்த தான முகாம் நடைபெற்றது. இதனை திமுகவின் முன்னாள் எம்பி கனிமொழி என்.வி.என்.சோமு தொடங்கி வைத்தார்.
அதனை தொடர்ந்து திமுக முன்னாள் எம்.பி.கனிமொழி என்.வி.என்.சோமு செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:-
தமிழ்நாட்டிற்கு எது முக்கியம் என்பதில் ஸ்டாலினின் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. தமிழ்நாட்டிற்கு அதிக தொகுதிகள் வர வேண்டும் என்பதிலேயே திமுகவின் கொள்கை என்றைக்கும் இருந்தது. நியாயமான தொகுதி மறுசீரமைப்புக்காக பல்வேறு கட்சிகளின் தலைவர்களை சென்னையில் அழைத்து ஸ்டாலின் கூட்டம் நடத்தி இருக்கிறார். அப்படியொரு செயல்பாடுகள் நடந்திருக்கும் போது, தமிழ்நாட்டில் இப்படியொரு ஆட்சி அமைந்திருப்பது துரதிஷ்டவசமானது.
அந்த ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சித் தலைவர்களை அழைத்தாவது என்ன ஆலோசிக்க வேண்டும் என்பதை பேசி இருக்கலாம். மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அதிக எம்பிக்களை கொண்டுள்ள திமுகவிடம் முதல்-அமைச்சர் விஜய் ஆலோசனை கேட்டிருக்கலாம். அதில் எந்த தவறும் இல்லை. தவெகவின் விமர்சனத்திற்கு நாங்கள் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. திமுக தொடக்கம் முதலே தமிழ்நாட்டிற்கான எண்ணிக்கை குறையக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறது என்றார்.
தேர்தலுக்கு பிறகு பாஜகவுடன் ஒரு நட்புறவு தொடர்வதாக விமர்சனங்கள் வைக்கப்படுகிறதே என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர்,
அரசியலில் யாரும் நிரந்த எதிரியும் இல்லை, நிரந்தர நண்பனும் இல்லை. தமிழ்நாட்டுக்கு எது நல்லதோ அது எங்கிருந்து வந்தாலும் அதை ஆமோதிப்போம் என தெரிவித்தார்.