

சென்னை,
எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் முகம்மது முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தவெக தலைமையிலான தமிழக அரசின் அமைச்சரவை விரிவாக்கத்தில், கூட்டணிக் கட்சியான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பாபநாசம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஷாஜகானுக்கும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் திண்டிவனம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வன்னி அரசுக்கும் அமைச்சரவையில் இடமளிக்கப்பட்டுள்ளதை எஸ்டிபிஐ கட்சி வரவேற்கிறது.
அதேவேளையில், சமூக நீதியின் அடிப்படையில் இந்த அமைச்சரவை விரிவாக்கத்தை உற்றுநோக்கும்போது சில நியாயமான ஆதங்கங்களை முன்வைக்க வேண்டியது அவசியமாகிறது. அனைத்துச் சமூகங்களுக்கும் சமூகநீதி அடிப்படையில் அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விடக் கூடுதல் இடங்கள் இந்த தவெக அரசில் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டாலும், சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு அளிக்கப்பட்டுள்ள பிரதிநிதித்துவம் மிகக் குறைவாகவே உள்ளது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அனைத்து சமூகத்தின் பங்களிப்பையும் உரிய பிரதிநிதித்துவத்தையும் உறுதிபடுத்த வேண்டியது இந்த அரசின் கடமையாகும்.
எனவே, ஆளுங்கட்சியான தவெக-விலிருந்தும் வெற்றிபெற்றுள்ள கூடுதலான முஸ்லிம் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சரவையில் இடங்களை ஒதுக்கீடு செய்திட வேண்டும். வார்த்தைக்கு வார்த்தை சமூகநீதியை காக்கும் அரசு என கூறும் இந்த அரசில் தமிழக அமைச்சரவையில் குறைந்தது ஐந்து முஸ்லிம் அமைச்சர்களாவது இடம்பெறுவதை முதல்-அமைச்சர் உறுதி செய்ய வேண்டும்.
மேலும், முஸ்லிம் பெயர் என்பதற்காக சிறுபான்மையினர் நலத்துறை என்ற வழக்கமான, சுருக்கப்பட்ட எல்லைகளுக்குள் மட்டும் முஸ்லிம் அமைச்சர்களை முடக்கிவிடக் கூடாது. அடையாள அரசியலுக்காக வெறும் பெயரளவு துறைகளை மட்டும் ஒதுக்காமல்; அண்டை மாநிலமான கேரளாவில் கூட்டணி கட்சியாக இருந்தாலும் முஸ்லிம் லீக் அமைச்சர்களுக்கு முக்கிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில் கல்வி, தொழில், வருவாய் உள்ளிட்ட அரசின் கொள்கை முடிவுகளைத் தீர்மானிக்கும் முக்கியத் துறைகளையும் முஸ்லிம் அமைச்சர்களுக்கு வழங்கிட முன்வர வேண்டும். அதிகாரப் பகிர்வும், சமத்துவமான துறை ஒதுக்கீடும் மட்டுமே உண்மையான சமூக நீதியை நிலைநாட்டும் என்பதால், பரந்துபட்ட பார்வையில் இக்கோரிக்கையைப் பரிசீலித்து, அமைச்சரவையில் முஸ்லிம் சமூகத்திற்கான உரிய பங்கீட்டை முதல்-அமைச்சர் உரிய பொறுப்புகளை வழங்கிட வேண்டும் என எஸ்டிபிஐ கட்சி சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.