மாணவர்களை அனுமதிப்பது சலுகை தான்; உரிமை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு

தேர்வில் தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுத அனுமதி வழங்குவது சலுகை தான். அதை மாணவர்கள் உரிமையாக கேட்க முடியாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மாணவர்களை அனுமதிப்பது சலுகை தான்; உரிமை இல்லை ஐகோர்ட்டு உத்தரவு
Published on

சென்னை,

சென்னை ஐகோர்ட்டில், மேகநாதன் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது. அண்ணா பல்கலைக்கழகத்தில், 1994-1998-ம் கல்வி ஆண்டுகளில் என்ஜினீயரிங் படித்தேன். அதில், கணிதம் உள்ளிட்ட 3 பாடங்களை தவிர மற்ற பாடங்கள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றேன்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அண்ணா பல்கலைக் கழகம் ஒரு அறிவிப்பு வெளியிட்டது. அதில், 2000-ம் ஆண்டுக்கு பின்னர் என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்து, தேர்ச்சிப் பெறாமல் இருக்கும் மாணவர்களுக்கு ஒரு முறை மட்டும் தோல்வியடைந்த பாடங்களை தேர்வு எழுத அனுமதிக்கப் படுவர் என்று கூறப்பட்டிருந்தது.

1994-ம் ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர்ந்த தனக்கும் இந்த வாய்ப்பை தரவேண்டும் என்று அண்ணா பல்கலைக் கழகத்திடம் முறையிட்டேன். ஆனால், எனது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது.

எனவே, தோல்வியடைந்த 3 பாடங்களின் தேர்வை எழுத எனக்கு அனுமதி வழங்கும்படி அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உத்தரவிட வேண்டும். இதனால் என்ஜினீயரிங் படிப்பை நான் முடித்துவிட்டேன் என்ற திருப்தி ஏற்படும். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை நீதிபதி எஸ்.வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது அண்ணா பல்கலைக்கழகம் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில், மனுதாரர் 7 செமஸ்டர் தேர்வுகளில் என்ஜினீயரிங் படிப்பை முடிக்க வேண்டும். அதில் தோல்வியடைந்து இருந்தால், அதில் இருந்து 6 ஆண்டுகளுக்குள் அனைத்து பாடத்திலும் தேர்ச்சிப் பெறவேண்டும். மனுதாரர் 2006-ம் ஆண்டு வரை தேர்வு எழுதியும் தேர்ச்சிப் பெறவில்லை. அதனால், தேர்வு எழுத அவருக்கு அனுமதி வழங்க முடியாது என்று கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது.

தோல்வி அடைந்த பாடத்தை மீண்டும் எழுத அனுமதி வழங்குவது என்பதே ஒருவிதமான சலுகை தான். மனிதாபிமான அடிப்படையில், தேர்வு எழுத மாணவர் களுக்கு பல்கலைக்கழகங்கள் அனுமதி வழங்குகின்றன. இந்த சலுகையை, மாணவர்கள் உரிமையாக கோர முடியாது.

மேலும், குறிப்பிட்ட காலத்துக்குள் மாணவர்களால், தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், ஒரு முறை வாய்ப்பு அளிக்கப்படுகிறது என்ற ரீதியில் அவர்களுக்கு பல்கலைக் கழகங்கள் சலுகைகள் வழங்கக்கூடாது. அது தேவையில்லாத குழப்பத்தை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்துகின்றன.

எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன். இந்த வழக்கை தொடர்ந்தவருக்கு ரூ.50 ஆயிரம் வரை அபராதம் விதிக்கலாம். இருந்தாலும், மனுதாரர் தேர்வு எழுத அனுமதிக் கேட்டுள்ளதால், அவருக்கு அபராதம் எதுவும் விதிக்கவில்லை. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com