

சென்னை,
தமிழக சட்டசபை தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களை கைப்பற்றியது. தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவு கொடுத்துள்ள நிலையில், தற்போதுள்ள தவெகவின் பலம் 112 ஆக உள்ளது. ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில், மற்ற கட்சிகள் தவெகவுக்கு இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை.
முன்னதாக, தவெக தலைவர் விஜய், நேற்று மாலை கவர்னர் அர்லேகரை சந்தித்தார். அப்போது தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி கவர்னரிடம் கடிதம் வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்கு தேவையான 118 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய்க்கு இல்லாததால், அவரை ஆட்சியமைக்க வரும்படி கவர்னர் அழைக்கவில்லை.
இந்தநிலையில், இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது;-
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது கூட்டணிக்கோ ஆட்சி அமைக்கும் வகையில் தமிழக மக்கள் தீர்ப்பு வழங்கவில்லை. இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்திற்கு 108 சட்டமன்ற உறுப்பினர்களை வழங்கி த.வெ.க.வை தனிப்பெரும் கட்சியாக தமிழக மக்கள் தேர்வு செய்துள்ளனர். தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் த.வெ.க தலைவர் சி. ஜோசப் விஜய் மட்டுமே ஆட்சி அமைக்க உரிமை கோரியிருக்கிறார்.
கவர்னர் மூலம் அரசியல் சாசனத்திற்கு விரோதமாக நடந்து கொள்வது, தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்வது என்ற அணுகுமுறையை பாஜக கடைபிடித்து வருகிறது. இதன் தொடர்ச்சியாகவே தமிழ்நாடு கவர்னர் அவரை பதவியேற்க அழைக்காமல் காலம் கடத்தி வருகிறார். இது ஏற்புடையதல்ல.
எனவே, வேறு யாரும் ஆட்சி அமைக்க உரிமை கோராத நிலையில் தனிப்பெரும் கட்சியாக வெற்றிபெற்றுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் சி.ஜோசப் விஜய்யை தமிழக கவர்னர் உடனடியாக பதவியேற்க அழைப்பு விடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.