ராமேசுவரம் கோவிலில் முழுநேர அன்னதான திட்டம்

ராமேசுவரம் கோவிலில் நேற்று முதல் முழுநேர அன்னதான திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
ராமேசுவரம் கோவிலில் முழுநேர அன்னதான திட்டம்
Published on

ராமேசுவரம் கோவிலில் நேற்று முதல் முழுநேர அன்னதான திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். முதல் நாளான நேற்று தொடங்கப்பட்ட இந்த முழு நேர அன்னதான திட்டத்தில் கலந்து கொண்டு சாப்பிட்ட பக்தர்கள் தெரிவித்த கருத்துக்கள் விவரம் வருமாறு:-

பயனுள்ள திட்டம்

திருப்பூரை சேர்ந்த பெண் பக்தர் ஸ்ரீதேவி:- ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் பல மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இவ்வாறு வரும் பக்தர்கள் மனநிறைவோடு செல்லும் வகையில் முழு நேர அன்னதான திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் தொடங்கி வைத்துள்ளார். முதல் நாளில் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அன்னதான உணவுகள் சாப்பிட்டோம். எதிர்பார்த்ததை விட சாப்பாடு நல்ல ருசியாகவே உள்ளது. இது ஒரு சிறப்பான திட்டம். குறிப்பாக கோவிலுக்கு வரக்கூடிய வசதிகள் இல்லாத ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பக்தர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அனைத்து தரப்பு பக்தர்களும் இதை விரும்பி சாப்பிடுவார்கள்.

ருசியாக உள்ளது

திருவண்ணாமலையை சேர்ந்த பெண் பக்தர் தனலட்சுமி:- தமிழக முதல்-அமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள முழு நேர அன்னதான திட்டத்தில் முதல் நாளில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டதில் மிகுந்த மகிழ்ச்சியாக உள்ளது. அன்னதான உணவு நல்ல தரமாகவும், அதிக ருசியாகவும் உள்ளது. தொலைதூரங்களிலிருந்து வரும் பக்தர்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு நிம்மதியாக கோவிலில் வழங்கப்படும் உணவுகளையும் வயிராற சாப்பிட்டு விட்டு மனமகிழ்ச்சியுடன் திரும்பி செல்வார்கள். முழு நேரமும் அன்னதானம் வழங்கப்படுவது என்பது கோவிலுக்கு வரக்கூடிய அனைத்து தரப்பு பக்தர்களுக்கும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். இது ஒரு வரவேற்க வேண்டிய திட்டம்.

மனநிறைவு

திருப்பூரை சேர்ந்த பெண் பக்தர் ஜனனி:- முழுநேர அன்னதான திட்டத்தை வரவேற்கிறோம். முதல் நாளிலேயே அன்னதான உணவு அதிக ருசியாகவே உள்ளது. இன்று போல் எல்லா நாட்களுமே இதே ருசியுடனும் தரத்துடனும் பக்தர்களுக்கு உணவுகள் வழங்கப்பட வேண்டும். இந்த திட்டத்தில் தமிழக முதல்-அமைச்சர் நேரடி கவனம் செலுத்தி தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். இதேபோன்று அனைத்து கோவில்களிலும் முழு நேர அன்னதான திட்டம் கொண்டு வந்தால் கோவிலுக்கு வரக்கூடிய வசதிகள் இல்லாத ஏழை குடும்பத்தை சேர்ந்த அனைத்து பக்தர்களுக்கும் பயனுள்ளதாக மனநிறைவோடு இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com