டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளை சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு

டெல்லியில் மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளை சேர்த்து தமிழகத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இதில் நேற்று ஒரே நாளில் 57 பேர் பாதித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பிரதிநிதிகளை சேர்த்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 124 ஆக உயர்வு
Published on

சென்னை,

கொரோனா தொற்று 2-ம் நிலையை எட்டும் வரையில் தமிழகத்தில் பாதிப்பு அதிகம் இல்லை என்ற எண்ணம் இருந்தது.

ஆனால் கடந்த மாதம் 13-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை டெல்லி நிஜாமுதீனில் நடந்த மதரீதியான மாநாட்டில் வெளிநாடுகள் மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் பங்கேற்றனர். அதில் பங்கேற்ற தெலுங்கானாவை சேர்ந்த 6 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு இறந்துள்ளனர். இந்த நிலையில் இந்த மாநாட்டில் தமிழகத்தைச் சேர்ந்த 1,500 பிரதிநிதிகள் கலந்து கொண்டது தெரிய வந்ததும், அவர்களை மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டிய நிலை எழுந்துள்ளது.

அவர்களில் தமிழகத்தில் 1,131 பேர் இருப்பது தெரியவந்துள்ளது. இதில் 515 பேர் மட்டுமே அடையாளம் காணப்பட்டுள்ளனர். மற்றவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். எவ்வளவு சீக்கிரம் அவர்களை கண்டுபிடிக்கப்படுகிறார்களோ, அவ்வளவு அதிகமாக தொற்றுக்களை தவிர்க்க முடியும்.

அந்த கூட்டத்தில் பங்கேற்றவர்களில் பலருக்கும் கொரோனா தொற்று இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்களில் ஈரோட்டைச் சேர்ந்த 17 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 16 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக செய்தி வெளியானது. அந்த வகையில் ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை திடீரென உயர்ந்திருக்கிறது. அதோடு, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், ஈரோடு, புதுக்கோட்டை, நாகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சில பிரதிநிதிகளும் அந்த மாநாட்டில் கலந்து கொண்டது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ், நிருபர்களிடம் கூறியதாவது:-

டெல்லியில் ஒரு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் 1,500 பேர் பங்கேற்றனர்.

இதில் தமிழகத்துக்கு வந்தவர்கள் 1,131 பேர். இவர்களில் 515 பேர் கடந்த 2 நாட்களில் தமிழக சுகாதாரத்துறையால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். தற்போது அவர்கள் அனைவரின் வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டியும், அவர்கள் கையில் அடையாள மை வைத்தும் வீட்டு கண்காணிப்பில் வைத்துள்ளோம். இதேபோல இந்த மாநாட்டில் பங்கேற்றவர்கள் யாரேனும் தமிழகத்தில் இருந்தால் தாமாக முன்வந்து சுகாதாரத்துறையிடம் தெரிவியுங்கள். இல்லை என்றால் அவர்களது குடும்பத்தினருக்கும், அக்கம் பக்கத்தினருக்கும் பரவும் அபாயம் உள்ளது.

இந்த மாநாட்டுக்கு சென்றவர்களில் 50 பேர் நேற்று ஒரேநாளில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிய வந்த்து. இவர்கள் இல்லாமல் 7 பேர் என மொத்தம் 57 பேர் ஒரே நாளில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது.

வீட்டுக் கண்காணிப்பில் இருப்பவர்களிடம் தொலைபேசியில் பேசி வருகிறோம். மேலும் அவர்களுடன் தொடர் பில் இருந்தவர்கள் பற்றி போலீசாருடன் இணைந்து சுகாதாரத்துறை அதிகாரிகளும் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த 515 பேரிடம் தொடர்பில் இருந்தவர்களையும் நாங்கள் அடையாளம் கண்டு வருகிறோம்.

சென்னை வணிக வளாகத்தில் வேலை செய்த அரியலூர் பெண்ணுக்கு தொடர்புடைய 500 பேரை அடையாளம் கண்டு அவர்களையும் கண்காணிப்பில் வைத்துள்ளோம். சென்னை பிராட்வேயை சேர்ந்த பெண்ணின் மகன் வெளிநாடு சென்று திரும்பி உள்ளார். அதனால் அவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம். அரசு சார்பில் நான் வேண்டுகோள் விடுக்கிறேன். டெல்லி மாநாடுக்கு சென்றவர்கள் தயவு செய்து தாங்களே முன்வந்து சுகாதாரத்துறைக்கு தகவல் அளிக்கவும்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 50 பேரில், நெல்லையை சேர்ந்த 22 பேரும், நாமக்கலை சேர்ந்த 18 பேரும், கன்னியாகுமரியை சேர்ந்த 4 பேரும், விழுப்புரத்தை சேர்ந்த 3 பேரும், மதுரையை சேர்ந்த 2 பேரும், தூத்துக்குடியை சேர்ந்த ஒருவரும் அடங்குவார்கள். இதுதவிர நேற்று 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் மற்றொருவர் விமான நிலையத்தில் வேலை செய்யும் கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஆகும்.

கொரோனா ஒரு புதிய நோய், உலக சுகாதார நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி அனைத்து சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. ஈரோட்டில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தீவிரமாக கண்காணிப்பு பணி மற்றும் கட்டுப்படுத்துதல் திட்டப்பணி நடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com