அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நேற்று உயிர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
Published on

உடுமலையை அடுத்த அமராவதி அணையில் இருந்து நேற்று உயிர் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

அமராவதி அணை

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகின்ற தேனாறு, பாம்பாறு, சின்னாறு உள்ளிட்டவை பிரதான நீர் ஆதாரங்களாக உள்ளன. அவற்றின் மூலமாக மழைக்காலங்களில் அணைக்கு நீர்வரத்து ஏற்படுகிறது.

இதை ஆதாரமாகக் கொண்டு திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. அத்துடன் அமராவதி ஆறு மற்றும் பிரதான கால்வாயை ஆதாரமாகக்கொண்டு சுற்றுப்புற கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

விவசாயிகள் கோரிக்கை

இந்த ஆண்டு அணையின் நீராதாரங்களில் தென் மேற்கு பருவமழை தீவிரமடைய வில்லை. இதன் காரணமாக அணைக்கு நீர்வரத்து ஏற்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அத்துடன் பாசன பரப்புகளில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதனால் பிரதான கால்வாயை ஆதாரமாக கொண்ட குடிநீர் திட்டங்களும் முடங்கும் சூழல் ஏற்பட்டது.

எனவே பிரதான கால்வாய் பாசன பகுதியில் கருகும் நிலையில் உள்ள பயிர்களை காப்பாற்றவும், குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யவும் தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் அதிகாரிகள் தண்ணீர் திறப்பதற்கு உண்டான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.

தண்ணீர் திறப்பு

இதைத் தொடர்ந்து அமராவதி பிரதான கால்வாயை ஆதாரமாகக் கொண்டுள்ள பாசனப்பகுதிகளில் உள்ள பயிர்களை காப்பாற்றும் வகையில் சிறப்பு நனைப்புக்கும், குடிநீர் தேவையை நிறைவு செய்யவும் 380.16 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்து விடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது.

இதையடுத்து நேற்று அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது. வருகிற 18-ந்தேதி வரை தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.

இதன் காரணமாக பிரதான கால்வாய் மூலம் புதிய பாசனத்தில் 25 ஆயிரத்து 250 ஏக்கர் நிலங்களும், குடிநீர் திட்டங்களும் பயன் பெறுகின்றன. இதனால் விவசாயிகள்,பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com