

கரூர்,
அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் கரூர் மாவட்ட எல்லையை வந்தடைந்தது. இதனால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம், உடுமலை அருகே அமராவதி அணை உள்ளது. இந்த அணையின் நீர்மட்டம் 90 அடியாகும். இந்த அணையின் தண்ணீர் திருப்பூர், கரூர் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. மேலும் 54 ஆயிரம் ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. இதன் மூலம் மஞ்சள் தென்னை, நெல், வாழை, கரும்பு, பருத்தி, சேனைக்கிழங்கு, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகிறது.
அமராவதி அணையில் இருந்து கடந்த 5 மாதங்களுக்கு மேலாக தண்ணீர் திறக்கப்படாததால் கரூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை நிலவி வந்தது. மேலும் தென்னை மரங்கள் காய்ந்து வந்தன. இந்தநிலையில் தமிழக அரசு கடந்த 31-ந் தேதி அணையில் இருந்து வினாடிக்கு 1000 கன அடி தண்ணீர் வீதம் 8 நாட்களுக்கு திறந்து விட உத்தரவு பிறப்பித்தது.
அதன்படி அமராவதி அணையில் இருந்து 1000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் இந்த தண்ணீர் கரூர் மாவட்ட எல்லைக்கு வந்து சேராது. எனவே உயர் நீதிமன்ற ஆணைப்படி 3 ஆயிரம் கன அடி தண்ணீர் திறக்க வேண்டுமென பொதுமக்களும், விவசாயிகளும், தி.மு.க.. அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் இணைந்து கடந்த 1-ந் தேதி சின்னதா ராபுரம் அருகே உள்ள கரூர் மாவட்ட எல்லையான ஒத்தமாந்துறையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கரூர் மாவட்ட கடைமடை பகுதி வரை தண்ணீர் வரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்ததை தொடர்ந்து விவசாயிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கரூர் மாவட்ட எல்லையான கோடந்தூர் ஊராட்சி வடகரை பகுதிக்கு அமராவதி அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் வந்து சேர்ந்தது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள், விவசாயிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் நேற்று மாலை 6 மணிக்கு சின்னதாராபுரம் அருகே சாலை மறியல் நடந்த ஒத்தமாந்துறை எனும் இடத்திற்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. இதேயளவு தண்ணீர் வந்தால் நாளை (திங்கட்கிழமை) இரவு கரூர் நகருக்கு வந்து சேரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
90 அடி கொண்ட அமராவதி அணையில் நேற்று காலை 6 மணி நிலவரப்படி 48.76 கனஅடி தண்ணீர் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 93 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து ஆற்றுக்கு 2 ஆயிரத்து 300 கன அடி தண்ணீர் திறந்துவிடப்படுகிறது. அணையில் தற்போது ஆயிரத்து 114 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில் 87.90 அடி தண்ணீர் இருந்தது குறிப்பிடத்தக்கது.