

அம்பாசமுத்திரம் தொகுதி இடைத்தேர்தலில், த.வெ.க. வேட்பாளரை எதிர்த்து சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த திடீர் அரசியல் மாற்றத்துக்கான காரணமும் தற்போது கசிந்துள்ளது.
தமிழ்நாட்டில் காலியாக உள்ள விராலிமலை, கரூர், அம்பாசமுத்திரம், பெருந்துறை, திருச்சி கிழக்கு ஆகிய 5 சட்டசபை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே, மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆளுங்கட்சியான த.வெ.க. வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் சட்டசபையில் த.வெ.க.வின் பலம் 107-ல் இருந்து 109 ஆக அதிகரித்துள்ளது.
இன்னும் த.வெ.க. அரசுக்கு தனி மெஜாரிட்டி கிடைக்க 9 இடங்கள் தேவையாக உள்ளது. ஆனால், 5 தொகுதிகளுக்குத்தான் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, அந்த 5 தொகுதிகளிலும் வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பறித்துவிட த.வெ.க. முனைப்பு காட்டி வருகிறது. அதே நேரத்தில், தி.மு.க., அ.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஆகியவை இடைத்தேர்தலில் த.வெ.க.வின் வெற்றியை தடுக்க திட்டமிட்டு வருகின்றன. சமீபத்தில் திருமண விழா ஒன்றில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், "6 மாதங்களுக்குக்கூட த.வெ.க. அரசு தாங்காது" என்று பேசினார்.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் இந்தப் பேச்சு, தமிழகத்தில் த.வெ.க. அரசை கலைக்க முயற்சி நடக்கிறதா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. இதற்கிடையே, தமிழகத்தில் தற்போதைய அரசியல் பரபரப்பாக, இடைத்தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்ற பேச்சு எழுந்துள்ளது.
இதுகுறித்து, சீமானிடம் பத்திரிகையாளர் கேள்வி எழுப்பியபோது, "தி.மு.க., அ.தி.மு.க. போன்ற திராவிடக் கட்சிகள் தங்களுக்கு பெருந்தன்மையுடன் ஆதரவு அளித்தால், அதை ஏற்க தயாராக இருக்கிறோம். பசியோடு இருப்பவனுக்கு பிரியாணி கொடுத்தால் வேண்டாம் என்றா சொல்வான்" என்று நகைச்சுவையாக பதில் அளித்தார்.
அதே நேரத்தில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினோ, "முதலில் தேர்தல் தேதி முறையாக அறிவிக்கப்படட்டும். அதன்பிறகு தி.மு.க.வின் நிலைப்பாட்டை அறிவிக்கிறோம்" என்று 'டுவிஸ்ட்' வைத்து பேசினார்.
சீமானை பொது வேட்பாளராக நிறுத்துவது குறித்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கருத்து எதுவும் தெரிவிக்காத நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற்றுள்ள அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன், 'அ.தி.மு.க. போட்டியிடுவதே நியாயம்' என்று கருத்து தெரிவித்துள்ளார்.
இப்படி, 5 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படுவதற்கு முன்பே தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. அதே நேரத்தில், இதுவரை நடைபெற்ற அனைத்து தேர்தல்களிலும் தனித்தே போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி, ஏன் இப்படி மனம் மாறுகிறது? என்ற கேள்வியும் எழுகிறது. அதற்கு காரணமும் இருக்கிறது. 2010-ம் ஆண்டு மே மாதம் 18-ந் தேதி தொடங்கப்பட்ட நாம் தமிழர் கட்சி 2016 சட்டசபை தேர்தலை முதல் முறையாக சந்தித்தது. அந்தத் தேர்தலில் 1.1 சதவீதம் வாக்குகளை பெற்றாலும், தொடர்ந்து நடந்த 2021 சட்டசபை தேர்தலில் 6.6 ஆக வாக்கு சதவீதம் அதிகரித்தது.
2024 நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி 8 சதவீத வாக்குகளை பெற்று அசத்தியதுடன், தேர்தல் ஆணையத்தால் மாநில கட்சியாக அங்கீகரிக்கவும்பட்டது. ஆனால், த.வெ.க.வின் வருகையால் 2026 சட்டசபை தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் பாதியாக குறைந்தது. தொடர்ந்து, நடந்த 2 தொகுதி இடைத்தேர்தலில், தாராபுரத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் திவ்யா 6,026 வாக்குகளையும் (3.03 சதவீதம்), மதுராந்தகத்தில் அக்கட்சி வேட்பாளர் ஜானகிராமன் 4,950 வாக்குகளையும் (2.5 சதவீதம்) மட்டுமே பெற முடிந்தது.
இதனால், தமிழகத்தில் நாம் தமிழர் கட்சி சரிவை சந்தித்து வருவது கண்கூடாக தெரிந்தது. தற்போது, வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலையும் அரசியல் களம் புகுந்துள்ளார். நடிகர் தனுஷூம் அதற்காக ஆயத்தமாகி வருகிறார். இதுபோன்ற அரசியல் அசாதாரண சூழ்நிலையில், கட்சியை நிலைநிறுத்திக்கொள்ள வேண்டிய கட்டாயம் நாம் தமிழர் கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. த.வெ.க.வின் வருகையால் நாம் தமிழர் கட்சியின் வாக்கு சதவீதம் பாதியாக குறைந்துவிட்ட நிலையில், மற்ற கட்சிகளின் வருகை மேலும் அதை பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுபோன்ற நிலையில்தான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மாற்றி யோசிக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். ஏற்கனவே, நடைபெற்ற சட்டசபை தேர்தல்களில் கடலூர் (2016), திருவொற்றியூர் (2021), காரைக்குடி (2026) ஆகிய தொகுதிகளில் வேட்பாளராக களம் கண்டு 'ஹாட்ரிக்' தோல்வியை தழுவியுள்ளார். எனவே, தொடர் தோல்விகளை தவிர்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலை சீமானுக்கு ஏற்பட்டுள்ளது. தற்போது, சட்டசபையில் பெண் உறுப்பினர்கள் சவுமியா அன்புமணி (பா.ம.க.), பிரேமலதா (தே.மு.தி.க.) ஆகியோர் சிறப்பாக பேசி வருகின்றனர்.
தற்போது, சட்டசபை நிகழ்வுகளும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுவதால், மக்கள் மத்தியில் இருவருக்கும் நல்ல பெயர் கிடைத்துள்ளது. இதனால், மக்கள் மன்றத்தில் நன்றாக பேசிவரும் சீமானுக்கு சட்டமன்றத்திலும் தனது குரல் எதிரொலிக்க வேண்டும் என்ற ஆர்வம் தலைதூக்கியுள்ளது. அதுதான் தற்போதைய மனமாற்றத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால், அம்பாசமுத்திரம் தொகுதியில் பொது வேட்பாளராக சீமான் நிறுத்தப்பட்டாலும் அவருக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?, இதுவரை தி.மு.க., அ.தி.மு.க.வையும் அவர் கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், அந்தக் கட்சிக்காரர்கள் எப்படி அவருக்கு ஓட்டுப் போடுவார்கள்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. எது எப்படியோ, சீமான் சட்டமன்றத்திற்குள் நுழைவதும், நுழையாததும் இப்போது அம்பாசமுத்திரம் தொகுதி வாக்காளர்கள் கையில்தான் உள்ளது.