பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு; 5 பேர் கைது

பொன்னேரி அருகே நெடும்பரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் சிலை உடைத்து சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
பொன்னேரி அருகே அம்பேத்கர் சிலை உடைப்பு; 5 பேர் கைது
Published on

அம்பேத்கர் சிலை சேதம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட நெடும்பரம்பாக்கம் கிராமத்தில் அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டமேதை அம்பேத்கர் முழு உருவ சிலை அமைக்கப்பட்டது. இந்த சிலையை அப்பகுதியை சேர்ந்தவர்கள் வேலி அமைத்து பாதுகாத்து வந்தனர். இந்நிலையில் நேற்று காலை அம்பேத்கர் சிலையின் முகத்தை சிதைத்தும், கை விரலை உடைத்தும் மர்மநபர்கள் சிலர் சேதப்படுத்தப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து அறிந்த அப்பகுதியினர் அங்கு திரண்டு வந்ததால் பதற்றம் நிலவியது. மேலும் தகவல் அறிந்து பல்வேறு அரசியல் கட்சியினர் சம்பவ இடத்திற்கு வந்ததையடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

5 பேர் கைது

மேலும், இது தொடர்பான தகவல் அறிந்த வருவாய் துறை மற்றும் சோழவரம் போலீசார் அங்கு விரைந்து வந்து சேதப்படுத்தப்பட்ட அம்பேத்கர் சிலையை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் பதற்ற சூழ்நிலையை தவிர்க்கும் வகையில் சிலையை துணி கொண்டு மூடி வைத்தனர். இது குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்திய நிலையில், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

அதில் அம்பேத்கர் சிலையை உடைத்து சேதப்படுத்தியதாக நெடும்பரம்பாக்கம் பெரிய காலனியை சேர்ந்த தென்னவன் (வயது 19), தவசி (21), சவுந்தரராஜன் (26), உதயா (20), அரவிந்த் (21) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இச்சம்பவம் நெடும்பரம்பாக்கம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com