அம்பேத்கர், தீரன் சின்னமலை சிலைகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் மட்டுமே மரியாதை செலுத்த வேண்டும் - தமிழக அரசு உத்தரவு

ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் அம்பேத்கர், தீரன் சின்னமலை சிலைகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் மட்டுமே மரியாதை செலுத்த வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அம்பேத்கர், தீரன் சின்னமலை சிலைகளுக்கு மாவட்ட கலெக்டர்கள் மட்டுமே மரியாதை செலுத்த வேண்டும் - தமிழக அரசு உத்தரவு
Published on

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி அம்பேத்கரின் பிறந்த நாளும், ஏப்ரல் 17-ந் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்த நாளும் சென்னையில் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

சென்னை துறைமுகத்தில் உள்ள அம்பேத்கர் உருவச் சிலைக்கும் மற்றும் சென்னை, கிண்டி தொழிற்பேட்டையில் உள்ள சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை உருவச் சிலைக்கும் அரசின் சார்பில் மாலைகள் அணிவித்தும், உருவப் படங்களுக்கு மலர் தூவியும் மரியாதை செய்யப்படுகிறது.

மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கடந்த 11-ந் தேதி காணொலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டபோது, ஊரடங்கு உத்தரவை கடுமையாக கடைபிடிக்க வேண்டும் என்றும், பொதுமக்கள் கூடும் அனைத்து நிகழ்ச்சிகளும், விழாக்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே, வருகிற 14-ந் தேதி அம்பேத்கர் பிறந்த நாள் மற்றும் 17-ந் தேதி சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்தநாள் நிகழ்ச்சிகளில், அவர்களின் உருவச் சிலைகளுக்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை மாவட்ட கலெக்டர் மட்டும் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்.

144 தடை உத்தரவு காரணமாக இந்த நிகழ்ச்சிகளில் பொதுமக்கள் கலந்துகொள்ள வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், இந்த ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் வரை, மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு பொதுமக்கள் கூடாமல் அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் மட்டுமே மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com