சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது

கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறித்த ஆம்புலன்ஸ் டிரைவர் கைது
Published on: 

கோவை,

கோவை மாவட்டம் காரமடை அருகே டீச்சர்ஸ் காலனி பூம்புகார்நகரை சேர்ந்தவர் ஜான்சன். தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி பிரியதர்ஷினி (வயது 31) கோவை தனியார் பல்கலைக்கழகத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று அவர். பல்கலைக்கழகத்துக்கு சென்று விட்டு பஸ்சில் டீச்சர்ஸ் காலனி நிறுத்தத்தில் இறங்கி நடந்து சென்றார்.

அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர் திடீரென்று பிரியதர்ஷினி கழுத்தில் அணிந்திருந்த 3.5 பவுன் தங்கச்சங்கிலியை பறித்து விட்டு மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பிச் சென்றார். இது குறித்து காரமடை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து மேட்டுப்பாளையம் கோத்தகிரி சாலையில் காரமடை இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். இதில், அவர், நீலகிரி மாவட்டம் குன்னூர் இளித்துறை பகுதியை சேர்ந்த அருள்நாதன் (31) என்பதும், அவர், 108 ஆம்புலன்சில் தற்காலிக டிரைவராக பணிபுரிந்ததும், பிரியதர்ஷினியிடம் நகை பறித்ததும் தெரிய வந்தது.

உடனே அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 3.5 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், கடன் தொல்லை அதிகமாக இருந்ததால் அதை சமாளிக்க முடியாமல் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

X